வனத்துறை வாகனத்தை ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு யானை - வைரல் வீடியோ

வனத்துறை வாகனத்தை காட்டு யானை சேதப்படுத்தியது.
கோவை,
கோவை தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரம் பகுதியில் நேற்று காட்டு யானை ஒன்று புகுந்தது. இதை அறிந்த போளுவாம் பட்டி வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானையை கண்காணித்தனர். பின்னர் அவர்கள், அங்குள்ள மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் பாதை வழியாக ஜீப்பில் சென்று காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதியை நோக்கி விரட்டினர்.
அப்போது காட்டு யானை திடீரென்று திரும்பி வனத்துறை வாகனத்தை நோக்கி வந்தது. இதனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தினர். இதற்கிடையே அந்த யானை ஆக்ரோஷமாக பிளிறியபடி வந்து துதிக்கையால் வனத்துறை வாகனத்தை தாக்கியது. இதில் அந்த ஜீப்பின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதனால் அந்த வாகனத்தில் இருந்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வனத்துறை வாகனத்தை, காட்டுயானை தாக்கி சேதப்படுத்தும் காட்சியை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






