தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்குமா? - வேளாண் அதிகாரிகள் விளக்கம்

தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்குமா? என்பது குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்குமா? - வேளாண் அதிகாரிகள் விளக்கம்
Published on

சென்னை,

பி.எம். கிசான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதிஉள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் இந்த நிதியில் இதுவரை 20 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டுக்கான முதல் தவணை (19-வது) பிப்ரவரி மாதத்திலும், 2-வது தவணை (20-வது ) ஆகஸ்டு மாதத்திலும் வழங்கப்பட்டது. இந்த நிலை யில், 3-வது தவணை (21-வது) தீபாவளி பண்டி கைக்கு முன்பாகவே வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்பட வில்லை.

இதற்கான காரணம் குறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள எண் பெற்றவர்களுக்கே அரசின் மானியத் திட்டங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் பல விவசாயிகள் அடையாள எண் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு 21-வது தவணை கிடைக்குமா? என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அதேநேரத்தில் போலி பயனாளிகள், இறந்தவர்கள் மற்றும் நிலங்களை விற்பனை செய்தவர்களை கணக்கெடுத்து நீக்கம் செய்யும் வகையிலான சரிபார்ப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு, இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத (டிசம்பர்) தொடக்கத்தில் விவசாயிகளுக்கான 21-வது தவணைத் தொகை விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் என்பது இனிவரும் காலங்களில் முக்கிய அடையாளமாக மாறவுள்ளதால், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையத்தை அணுகி கட்டணமில்லாமல் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com