மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயரும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழகத்தை பார்த்து 10 மாநிலங்கள் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெல்லும் தமிழ்ப்பெண்கள் விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2ம் கட்டத்தில் 16.94 லட்சம் பயனாளிகளை சேர்த்து, புதிய பயனாளிகளுக்கு கணக்கு அட்டையை வழங்கினார். இதன் மூலம் இத்திட்டத்தில் பயன்பெறும் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை சுமார் 1 கோடியே 30 லட்சமாக உயர்ந்துள்ளது.
வெல்லும் தமிழ்ப்பெண்கள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாபெரும் வெற்றி. திராவிட இயக்க தொண்டனாக அளவில்லா மகிழ்ச்சி. 3 மணி நேரமாக தன்னம்பிக்கை கதைகளை கேட்டு நெகிழ்ச்சியடைந்தேன்.விடுபட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கியுள்ளோம். பொருளாதார அறிஞர்கள் பாராட்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டம். “தினத்தந்தி” நாளேடு தலையங்கம் பாராட்டிய திட்டம்.
வரலாற்றை திருத்தி எழுதும் திட்டம் மகளிர் உரிமைத் தொகை. எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் எனது லட்சியம். திட்டம் மக்களை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதுதான் முக்கியம். உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1,000 வழங்குவது தொடக்கம் மட்டுமே, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வழங்கப்படும் தொகை நிச்சயம் உயரும்.
வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக அமைந்ததே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். திட்டம் தொடங்கும்போதே அறிவித்தோம். இது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை. திராவிட மாடல் திட்டத்தால் பணப்புழக்கம், சேமிப்பு அதிகரிக்கிறது. உரிமைத்தொகை ரூ.1,000, விடியல் பயணத்தால் ரூ.1,000 மிச்சம், புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1,000 தருகிறோம். உரிமைத்தொகையால் குழந்தைகள் கல்விக்கு செலவிடுவது போன்ற வழிகளில் வாழ்க்கைத்தரம் உயர்கிறது. கலைஞர் உரிமைத்தொகை வெற்றியின் உச்சம் என்பதை அண்டை மாநிலங்கள் உணர்ந்துள்ளன.
மக்கள் நலத்திட்டங்களை இலவசம் எனக்கொச்சைப்படுத்தியோர் கூட இதை செயல்படுத்துகின்றனர். தமிழகத்தை பார்த்து 10 மாநிலங்கள் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. நமது திட்டத்தால், சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் குறித்து பொருளாதார அறிஞர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.வரலாற்றில் எந்த மாநிலமும் சாதிக்காத அளவுக்கு தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது.வரலாற்றில் எழுதும்போது, மகளிர் முன்னேற்ற அத்தியாயத்தை திராவிட மாடல் ஆட்சி தொடங்கியது என எழுதுவர். கல்விதான் சிறந்த முதலீடு, யாராலும் அழிக்க முடியாது சொத்து.ஆணும், பெண்ணும் சரிசமமாக சிறகடித்து பறக்க வேண்டும் அதற்கு உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






