திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

சிவந்திபட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியின்போது ஒரு வாலிபரை சோதனை செய்தபோது அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சந்திரன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவந்திபட்டி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சிவந்திபட்டி குத்துக்கல் விளக்கு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த லெட்சுமணன் (வயது 25) என்பவரை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருநெல்வேலி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நேற்று முன்தினம் லெட்சுமணனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.






