வேலைவாய்ப்புகள் வழங்கும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்


வேலைவாய்ப்புகள் வழங்கும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்
x

பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டுக்கு சென்றபோது, அவர் முன்னிலையில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.


பிரதமர் நரேந்திர மோடி, திசைகள் எட்டில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இந்தியாவுக்கு தேவையான பல நல்ல ஒப்பந்தங்களை செய்துவருகிறார். அவர் பிரதமராக பதவியேற்ற பின்னர் பல நாடுகளோடு இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

2021-ம் ஆண்டில் மொரீஷியஸ் நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது ஆப்பிரிக்க நாடுகளுடன் செய்யும் வர்த்தகத்துக்கான நுழைவு வாயிலாக அமைந்தது. 2022-ல் ஐக்கிய அரபு அமீரகத்துடன் கரங்களை இணைத்து ஒப்பந்தம் செய்தது. அப்போது, இந்தியா ஏற்றுமதி செய்யும் 90 சதவீதத்துக்கும் மேலான பொருட்களின் வரியை குறைத்ததினால் விலை உயர்ந்த ஆபரண கற்கள், நகைகள், துணி, என்ஜினீயரிங் பொருட்களின் வர்த்தகத்தை வளர்த்தெடுத்தது.

அதே ஆண்டில் ஆஸ்திரேலிய நாட்டுடன் போட்ட வர்த்தக ஒப்பந்தத்தால் பல பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டதோடு, சில பொருட்களின் வரி ரத்தும் செய்யப்பட்டது. இது மிகுந்த பலன் அளித்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஐரோப்பியா தடையில்லா வர்த்தக சங்கத்தோடு கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தம் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, லீச்சென்ஸ்டீன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளோடு வர்த்தக கூட்டு வைத்துக்கொள்ள வழிவகுத்தது. இந்த ஆண்டு இங்கிலாந்துடன் மேற்கொண்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், அந்த நாட்டுடன் செய்துவரும் வர்த்தகத்தில் 90 சதவீதத்துக்கு மேலான பொருட்களுக்கு வரியை கணிசமாக குறைத்தது. அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் ஓமன் நாட்டுக்கு சென்றபோது, அவர் முன்னிலையில் இந்தியா-ஓமன் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனால் இந்தியாவில் இருந்து அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் 98.08 சதவீத பொருட்களின் வரி ரத்தாகிறது. இதுபோல ஓமனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 94.81 சதவீத பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்கள், பர்னிச்சர்கள், மருந்து பொருட்கள், மருத்துவ கருவிகள், மோட்டார் வாகனங்கள் போன்ற பல பொருட்களை ஓமனுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இதேபோல ஓமனில் இருந்து பேரீச்சம்பழம், பளிங்கு கற்கள், பெட்ரோ ரசாயன பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்கிறது. புதிய ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 2 ஆயிரம் டன் பேரீச்சம் பழங்களை வரியில்லாமல் இறக்குமதி செய்யலாம் என்பது இனிப்பான செய்தியாகும். ஆனால் இந்தியா, ஓமனுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பை விட அங்கிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்புதான் அதிகம்.

நமது ஏற்றுமதி மதிப்பு ரூ.36 ஆயிரம் கோடிதான். ஆனால் இறக்குமதி மதிப்பு ரூ.58 ஆயிரம் கோடியாக உள்ளது. ஆக இந்தியாவின் ஏற்றுமதியை இன்னும் அதிகரிப்பது அவசர அவசியமாகிறது. இதுபோல ஓமனில் செயல்பட்டுவரும் இந்திய நிறுவனங்களில் 50 சதவீத இந்திய ஊழியர்களை நியமித்துக் கொள்ளவும் ஒப்பந்தத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்தியா-ஓமன் கூட்டாண்மையுடன் இயங்கும் 6,000 நிறுவனங்கள் ஓமனில் இருக்கின்றன.

அங்கு இனி இந்தியர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதுபோல கணக்காயர்கள், கட்டிட வல்லுனர்கள், மருத்துவம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள், வரி விதிப்பு போன்ற தொழில்களிலும் திறன் வாய்ந்த இந்தியர்களுக்கு வேலை அளிக்க வகை செய்யும் முக்கிய அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஓமன் நாட்டுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் மூலம் வர்த்தகம் மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பும் பெருகும்.

1 More update

Next Story