அமெரிக்க வேலை கனவு தகர்ந்தது

இந்தியாவிற்கு அழுத்தம் தரவே அமெரிக்கா விசா கட்டணத்தை அதிகரித்து இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் தங்களது பணித்திறமையால் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கு ஏற்ப உலகம் முழுவதும் சென்று வேலை செய்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் இந்தியர்களின் திறமை பரிணமித்து ஒளிவீசுவது இப்போது அந்தந்த நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, தலைவர்களுக்கும் கண்களை உறுத்துகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட பேரணி, அங்கு அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்தியர்களுக்கு அதிர்ச்சியான தகவல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் உத்தரவால் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், திறமை பெற்ற வெளிநாட்டினர் பணியாற்றுவதற்காக 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் எச்-1பி விசா அந்த அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், 65 ஆயிரம் எச்-1பி விசாக்கள் அங்கு வேலை பார்க்கும் வெளிநாட்டினருக்கும், அமெரிக்காவில் படித்து முடித்து வேலை பார்க்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 20 ஆயிரமும் என மொத்தம் 85 ஆயிரம் எச்-1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் எச்-1பி விசா 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பெற்று இருக்கிறார்கள். மேலும் அவர்களது குடும்பத்தினர் 6 லட்சம் பேர் என மொத்தம் 13.5 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இந்த விசா பெற்றவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள். நமக்கு அடுத்து சீனாவை சேர்ந்தவர்கள் 11 சதவீதம் பேர் உள்ளனர்.
இதுவரை எச்-1 பி விசா கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.32 லட்சம் வசூலிக்கப்பட்டது. டிரம்ப் உத்தரவினால் இது ரூ.88 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த கட்டணத்தை வேலை பார்ப்பவர்களோ, வேலை தரும் நிறுவனங்களோ இனி செலுத்துவது சாத்தியமானது அல்ல. ஏனென்றால் எச்-1 பி விசாவில் உள்ள இந்தியர்களில் 60 சதவீதம் பேர் ஒரு ஆண்டுக்கு சம்பாதிக்கும் வருமானத்தைவிட இந்த கட்டணம் அதிகம். ஆனால் இது “புதிதாக எச்-1பி விசாவுக்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் இருந்து ஒருமுறை மட்டுமே வசூலிக்கப்படும். ஏற்கனவே இந்த விசாவில் இருப்பவர்களுக்கு இது பொருந்தாது’’ என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அங்கு வேலை பார்த்து கொண்டு இருப்பவர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தாலும், அமெரிக்காவில் போய் வேலை பார்க்கலாம் என்ற ஆசை கனவுகளுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருப்பவர்களுக்கு பேரிடியாக அமைந்து இருக்கிறது. ஆக அமெரிக்க வேலை என்பது எட்டாக்கனி தான்.
ஏற்கனவே 50 சதவீத வரி தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழ்நிலையில் இந்தியாவிற்கு அழுத்தம் தரவே அமெரிக்கா விசா கட்டணத்தை அதிகரித்து இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். விசா கட்டணத்தால் அமெரிக்காவில் இழந்த இந்த வேலைவாய்ப்புகளை மற்ற வெளிநாடுகளில் இருந்து ஈட்ட முடியுமா? அல்லது இந்தியாவிலேயே அந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறமுடியுமா? என்பதற்காக மத்திய அரசு பெரிய நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு தீர்வு காணவேண்டும். தினத்தந்தி குழுமத்தின் ஆங்கில நாளிதழான டி.டி.நெக்ஸ்ட்-க்கு ‘ஜோகோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அளித்த பேட்டியில், “இப்போதுள்ள சூழ்நிலையில் வெளியில் இருந்து வரும் சவால்களை உள்நாட்டின் பலமாக மாற்றவேண்டும். இங்கேயே வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது’’ என்று சொன்னதை கவனத்தில் கொள்ளவேண்டும்.






