வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை

மத்திய அரசாங்கம் வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கு பல வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறது.
மத்திய அரசாங்கம் வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கு பல வாக்குறுதிகளை ஏற்கனவே அறிவித்திருக்கிறதுஒரு நாடு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அளவுகோல் வேலைவாய்ப்புதான். வேலைவாய்ப்புகளை அரசால் மட்டும் வழங்கிவிடமுடியாது. தனியார் நிறுவனங்களில்தான் வேலைவாய்ப்பை அதிகமாக வழங்கமுடியும். எனவேதான் அரசுகள் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை, அலுவலகங்களை தொடங்க அனுமதி கேட்கும்போது அவர்களின் முதலீட்டைவிட, அந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டால் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை முக்கியமாக கருத்தில்கொள்கின்றன. அதன் அடிப்படையில்தான் ஊக்க சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கு பல வாக்குறுதிகளை ஏற்கனவே அறிவித்திருக்கிறது. அதை நிறைவேற்றும் வகையில் உற்பத்தி துறையில் சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.
இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடந்த பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபை கூட்டத்தில் ரூ.99,446 கோடி செலவில் 2 ஆண்டுகளில் 3½ கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டு நிறைவேற்றப்போகிற வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம் இரண்டு பகுதிகளாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இதில் முதல் பகுதி முதல்முறை பணியாளர்களை இலக்காக கொண்டதாகும். அவர்களுக்கு ஒரு மாத வருங்கால வைப்பு நிதி ஊதியத்துக்கு இணையாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்த தொகை இரு தவணைகளாக நேரடியாக அவர்கள் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும்.
முதல் தவணைத்தொகை அவர்கள் வேலைக்கு சேர்ந்து 6 மாதங்களிலும், இரண்டாம் தவணைத்தொகை ஒரு ஆண்டிலும் வழங்கப்படும். அடுத்த மாதம் முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை வேலையில் சேருபவர்கள் இந்த திட்டத்தின் பலனை அடைய தகுதியுடையவர்கள். இந்த திட்டம் மூலம் புதிதாக வேலைக்கு சேரும் சுமார் 1.9 கோடி பேருக்கு பலன் கிடைக்கும். இந்த திட்டத்தின் இரண்டாம் பகுதி வேலைவாய்ப்பை தருபவர்கள் அதாவது நிறுவனங்களின் உரிமையாளர்களை இலக்காக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கம் கூடுதலாக வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டும் என்பதுதான்.இதன்படி கூடுதலாக நியமிக்கப்படும் ரூ.1 லட்சம் வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களை வேலைக்கு நியமிக்கும் நிறுவனங்களுக்கு அந்த தொழிலாளிக்கு 6 மாதங்களுக்கு மேல் வேலையில் இருக்கும்பட்சத்தில் அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசாங்கம் மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்கும்.
இதேபோல நீட்டிக்கப்பட்ட 3 மற்றும் 4-வது ஆண்டுகளில், மாதம் ரூ.10 ஆயிரம் வாங்குபவர்களுக்கு ரூ.1,000, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வாங்குபவர்களுக்கு ரூ.2 ஆயிரம், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இது குறைந்த அளவில் பணியாளர்களை வைத்திருக்கும் கடைகள் மற்றும் சிறிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.ஏற்கனவே 50 தொழிலாளர்களை வைத்து வேலைவாங்கும் தொழில் நிறுவனங்கள் கூடுதலாக 2 தொழிலாளர்களையும், அதற்கு மேல் தொழிலாளர்களைக்கொண்ட நிறுவனங்கள் கூடுதலாக 5 தொழிலாளர்களையும் நியமித்து 6 மாதங்களுக்கு மேல் வேலையில் நீடித்தால் மத்திய அரசாங்கத்தின் இந்த சலுகை அந்த நிறுவனங்களுக்கும் கிடைக்கும்.
3½ கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் 2 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும் என்று இலக்கு நிர்ணயித்து, அதையும் தனியார் நிறுவனங்கள் மூலம் நிறைவேற்றுவதற்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை அளிக்க முன்வந்துள்ள மத்திய அரசாங்கத்தின் இந்த திட்டம் மிகவும் வரவேற்புக்குரியது. இந்த ஊக்கத்தொகைகளை வழங்குவதற்கான நடைமுறைகளை சிக்கல் இல்லாமல் இலகுவாக்குவதில்தான் இதன் வெற்றியே இருக்கிறது.






