இந்தியாவின் விண்வெளி நிலையம்

சுபான்ஷூ சுக்லாவின் பயணத்துக்கு இந்தியா ரூ.568 கோடி கட்டணமாக கொடுத்திருக்கிறது.
இந்தியா எல்லா துறைகளிலும் வேகமாக முன்னேறி கொண்டிருப்பதுபோல விண்வெளி ஆய்விலும் இப்போது விண்ணை தொடும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறது. தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் இருக்கின்றன. இங்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு சொந்தமான செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 594 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 23-ந்தேதி டெல்லியில் நடந்த விண்வெளி தினத்தில் பேசும்போது, “இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிலைநிறுத்தப் போகிறது” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த முயற்சியை முழுமையாக 2035-ல்தான் நிறைவேற்றமுடியும் என்றாலும், அதற்கு முன்னேற்பாடான திட்டங்களை செயல்படுத்த ஆயத்தமாகிவிட்டது. இந்த விண்வெளி நிலையத்தை அமைக்க 5 தொகுப்புகள் தேவை. இதற்கான முதல் தொகுப்பு 2028-ல் விண்ணில் ஏவப்படும். புவியின் குறைந்த சுற்றுவட்ட பாதையில் அதாவது பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் அது நிலைநிறுத்தப்படும். தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக 7 ஆண்டுகளில் அடுத்த 4 தொகுப்புகளும் அனுப்பப்பட்டு கடைசியில் 5 தொகுப்புகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, விண்வெளி நிலையமாக உருவெடுக்கும். தற்போது 2 விண்வெளி நிலையங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று சர்வதேச விண்வெளி நிலையம் என்று அழைக்கப்படுகிறது. அது அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சொந்தமானதாகும்.
கடந்த 2000-ம் ஆண்டு விண்ணில் நிறுத்தப்பட்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க ஆன மொத்த செலவு ரூ.10 லட்சம் கோடியாகும். இதுதவிர சீனாவுக்கு சொந்தமான விண்வெளி நிலையமும் இருக்கிறது. இதற்கு சீனாவில் இருந்து மட்டுமே விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள். அங்கு எத்தனை வீரர்கள் தங்கியிருக்கிறார்கள்? என்ன ஆய்வுகள் நடக்கிறது? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத பரம ரகசியமாக இருக்கிறது. மாறாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பல நாடுகள் கட்டணம் செலுத்தி தங்கள் நாடுகளில் இருந்து விண்வெளி வீரர்களை அனுப்பி தங்களுக்கு தேவையான ஆய்வுகளை செய்துவருகின்றன. இந்த விண்வெளி நிலையத்தில் அதிகபட்சமாக 13 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.
சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் இருந்து இந்த சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்ட 4 பேரில் இந்தியாவில் இருந்து ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள சுபான்ஷூ சுக்லாவும் சென்று 18 நாட்கள் தங்கியிருந்து வெற்றிகரமாக தன் ஆய்வுகளை முடித்துக்கொண்டு திரும்பியிருக்கிறார். அவரது பயணத்துக்கு இந்தியா ரூ.568 கோடி கட்டணமாக கொடுத்திருக்கிறது. இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030-ம் ஆண்டு வரைதான். அடுத்து 2035-ல் இந்தியா நிலை நிறுத்தப்போகும் விண்வெளி நிலையத்துக்கு முன்பு மற்றொரு சர்வதேச விண்வெளி நிலையத்தை நிலைநிறுத்த இந்த நாடுகள் திட்டமிட்டுள்ளன. இந்தியாவின் விண்வெளி நிலையம் எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரியை கடந்த மாதம் 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். ஆக சர்வதேச விண்வெளி நிலையம், சீனாவின் விண்வெளி நிலையமான டியான்காங்-க்குக்கு பிறகு இந்தியாவுக்கு சொந்தமாக பாரதிய அந்தரிக்ஷா நிலையமும் அடுத்த 10 ஆண்டுகளில் மிக பெருமையோடு விண்ணில் வலம் வரப்போகிறது.






