இதுவரையிலும் நடந்தது இல்லை, இனிமேலும் நடக்க கூடாது

இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் மற்றும் விஜய் தரப்பிலும் நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
த.வெ.க. தலைவர் விஜய், வாரம்தோறும் சனிக்கிழமை 2 மாவட்டங்களுக்கு சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை, கரூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத, இனிமேலும் நடக்க கூடாத ஒரு பெரிய துயர சம்பவம் நடந்து கருப்பு நாளாக பதிவாகி விட்டது. விஜய்யை பார்ப்பதற்காக முண்டியடித்த கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டு, 9 பிஞ்சு குழந்தைகள், 17 பெண்கள், 14 ஆண்கள் என இதுவரையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த கூட்டத்துக்கு அனைத்து முன்னேற்பாடுகளும், எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அது எதுவுமே முறையாக செய்யப்படவில்லை. கரூரில் த.வெ.க. சார்பில் கூட்டம் நடத்த 4 இடங்களை குறிப்பிட்டு அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அந்த இடங்கள் எல்லாம் வணிக பகுதிகள் என்ற காரணத்தை கூறி கரூர்-ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் நடத்திக்கொள்ள 11 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதியளித்தனர். ஆனால் இந்த நிபந்தனைகள் மீறப்பட்டன.
விஜய் அங்கு மதியம் 12 மணிக்கு பேசுவார் என்று த.வெ.க.சார்பில் அறிவிக்கப்பட்டதால் அவரை பார்க்க காலை முதலே ஏராளமானோர் குவிந்துவிட்டனர். வயதானவர்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளும் வரக்கூடாது என்ற விஜய்யின் வேண்டுகோள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. பல மணி நேரம் தண்ணீர் குடிக்காமல், உணவு அருந்தாமல் காத்திருந்த அந்த பெரும் கூட்டம் களைப்பால் துவண்டு போயிருந்த நிலையில் இரவு 7 மணிக்குதான் விஜய் அங்கு வந்தார்.
அவர் பேச தொடங்கியவுடன், அவரை அருகில் காண அவரது வாகனத்தை நோக்கி ஏராளமானோர் முண்டியடித்து முன்னேற தொடங்கினர். அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்த நிலையில் விஜய் தனது பேச்சை சுருக்கமாக முடித்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார். ஆனால் அதற்குள் நெரிசலில் சிக்கி ஏராளமானோர் மயங்கினர். தகவலறிந்து ஏராளமான ஆம்புலன்சுகள் அங்கு அணிவகுத்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இரவு 1 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சி சென்றார். அங்கிருந்து கரூருக்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அனைத்து மருத்துவ உதவிகளுக்கும் ஏற்பாடு செய்தார்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் மற்றும் விஜய் தரப்பிலும் நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. என்னதான் நிவாரணங்கள் வழங்கினாலும், இறந்த உயிர்களை மீட்டு கொண்டு வர முடியாது. இந்த விபத்திற்கு காரணம் சரியான திட்டமிடுதல் இல்லாததாலும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதும்தான்.
எந்த தலைவருடைய கூட்டம் என்றாலும் இனி கூட்ட மேலாண்மையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சரியாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். காவல்துறையும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் தாங்களாகவே போய் இதுபோல துயரங்களை விலை கொடுத்து வாங்கி கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்டுக்கடங்காத கூட்டம்தான் வரும் என்றால் பெரிய மைதானங்களில் மட்டுமே கூட்டம் நடத்துவதற்கு அரசியல் கட்சி தலைவர்களும் முன் வரவேண்டும். அரசும் அதற்கே அனுமதி தர வேண்டும். இனியும் இதுபோன்ற துயர சம்பவம் ஒருபோதும் நடக்கவே கூடாது.






