நீட் தேர்வும், நீங்காத கட்டுப்பாடுகளும்!

இந்த ஆண்டு நாடு முழுவதும் 20 லட்சத்து 80 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேரும் நீட் தேர்வு எழுதினார்கள்.
நீட் தேர்வே வேண்டாம் என்ற குரல் பலமாக எழுந்துகொண்டிருக்கும் நேரத்தில் அந்த தேர்வை எழுதும் மாணவர்களுக்கு விதிக்கப்படும் தேவையற்ற கட்டுப்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடு என்ற கண்டன குரல்கள் எழுந்துகொண்டிருந்தாலும் அதை தேர்வு முகமை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. இந்த ஆண்டு நாடு முழுவதும் 20 லட்சத்து 80 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேரும் எழுதினார்கள். தேர்வை முறையாக நடத்தவேண்டும் என்பதிலோ, எந்தவித முறைகேடும் நடக்கக்கூடாது, திறமையுள்ளவர்கள் மட்டும் வெற்றி பெறவேண்டும் என்றவகையில் தேர்வு மையத்தில் யாரும் காப்பி அடிக்கக்கூடாது என்பதிலோ எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை. ஆனால் கட்டுப்பாடு, சோதனை என்ற பெயரில் மாணவ-மாணவிகளை வாட்டி வதைப்பதை எந்த காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒவ்வொரு நீட் தேர்வின்போதும் இந்த எதிர்ப்பு குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அடுத்த ஆண்டு முந்தைய ஆண்டைவிட அதிகமாகவே சோதனை என்ற பெயரில் மாணவ-மாணவிகள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
ஆடை கட்டுப்பாடு பற்றி ஹால் டிக்கெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் முழுக்கை சட்டை அணியக்கூடாது, பட்டன்கள் இருக்கக்கூடாது, அரைக்கை டீ-சர்ட்டுதான் அணியவேண்டும், 'பெல்ட்' அணியக்கூடாது, ஷூ போடக்கூடாது என்று மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. இதைவிட கொடுமை என்னவென்றால் மங்களகரமாக இருக்கவேண்டிய பெண்களின் கூந்தலை அவிழ்த்துவிட்டு தலைவிரி கோலமாக செல்லவேண்டும், பொட்டு வைக்கக்கூடாது, கம்மல், மூக்குத்தி, கொலுசு, ஏன் செயினும் அணியக்கூடாது என்று மாணவிகளை அலங்கோலமாக்கிவிட்டே தேர்வு மையத்துக்கு அனுப்பினார்கள். திருவாரூரில் திருமணம் முடிந்து சில நாட்களே ஆன பெண் தேர்வு மையத்துக்கு வந்தபோது அவருடைய தாலி சங்கிலியை கழற்றவேண்டும் என்று நிர்ப்பந்தித்ததால் தாலி கட்டிய கணவன் முன்பே தாலியை கழற்றிய சம்பவமும் நடந்தது. திருச்சியில் முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவியை அனுமதிக்காததால், அவருடைய பெற்றோரே கத்தரியால் அந்த சட்டையின் முழுக்கையை வெட்டி அகற்றினார்கள்.
முஸ்லிம் மாணவிகளை அவர்கள் அணிந்திருந்த பர்தாவை கழற்ற சொன்னதும், மாணவர்கள் அணிந்திருந்த பூணூல், ருத்ராட்ச மாலையை கழற்ற சொன்னதும் கொடுமையிலும் கொடுமை. இவ்வளவு துன்புறுத்தல்கள் மத்தியில் காவலுக்கு இருந்த தமிழக போலீஸ்காரர்கள் அத்தனை இடங்களிலும் மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டனர். திருப்பூரில் ஒரு மாணவியின் சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்தது என்பதற்காக உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. உடனே அங்கு காவலுக்கு இருந்த பெண் போலீஸ் ஏட்டு மணிமேகலை, அந்த மாணவியை தன் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று அருகில் உள்ள துணிக்கடையில் வேறு ஆடை வாங்கிக்கொடுத்து தேர்வு எழுத வைத்தார்.
சென்னையில் ஒரு மாணவர் அசல் ஆவணங்கள் இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்டார். உடனடியாக அங்கு பணியில் இருந்த வில்லிவாக்கம் உதவி கமிஷனர் சிதம்பர முருகேசன், பிரசாந்த்குமார் என்ற போலீஸ்காரரை இண்டர்நெட் மையத்துக்கு அனுப்பி அங்கு ஆவணங்களை பதிவிறக்கம் செய்துகொண்டுவர ஏற்பாடு செய்தார். அந்த மாணவரும் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினார். இதுபோல பல இடங்களில் போலீஸ்காரர்களின் உதவி மகத்தானதாக இருந்தது. சிவில் சர்வீஸ் தேர்வு உள்பட எந்த அரசு பணிகளுக்கான தேர்விலும் இவ்வளவு கெடுபிடி இல்லை. மேலும் இப்போதெல்லாம் சோதனைக்காக நவீன கருவிகள் இருக்கும்போது இத்தகைய தேவையற்ற கெடுபிடிகள் தேவையா? அடுத்த ஆண்டாவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.






