ஒரு பக்கம் ராக்கெட்; மற்றொரு பக்கம் வரியா?

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.7 லட்சத்து 26 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி நடந்திருக்கிறது.
இந்தியாவின் இஸ்ரோ நிறுவனமும், அமெரிக்காவின் நாசா நிறுவனமும் இணைந்து கடந்த புதன்கிழமைதான் நிசார் செயற்கைக்கோளை சுமந்தவாறு ஜி.எஸ்.எல்.வி.-எப்16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
எல்லோருமே மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து கொண்டிருந்த அதேநாளில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்காக அபராதமும் விதிக்கப்படும், அதுவும் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருப்பது பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்தே அவரது அதிரடி ஆட்டம் தொடங்கிவிட்டது.
முதலில் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி என்றார். பிறகு ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் அடிப்படை வரி விதித்தார். அந்த காலகட்டத்திலேயே இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி என்றார். இதற்கு பலத்த எதிர்ப்பு குரல்கள் கிளம்பின. இதைத்தொடர்ந்து இந்த 26 சதவீத வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதேநேரத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எட்டப்படும் என்றார்.
எனவே இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பல முறை பேச்சுவார்த்தை நடந்தும் முடிவு காணப்படவில்லை. இந்தநிலையில் 90 நாட்கள் காலக்கெடு ஜூலை 9-ந்தேதியோடு முடிவடைந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்று சூழ்நிலை எழுந்ததால், இந்த காலக்கெடு இன்று வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் அடுத்த கூட்டம் ஆகஸ்டு 25-ந்தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையே இன்னும் முடியாத நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இந்தியாவுக்கு 25 சதவீத வரியும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயும், ராணுவ உபகரணங்களும் வாங்குவதற்காக அபராதமும் விதிக்கப்படும் என்று தடாலடி அறிவிப்பை வெளியிட்டார்.
அபராதம் எத்தனை சதவீதம் என்று அவர் கூறவில்லை. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயும், ராணுவ உபகரணங்களும் வாங்குகிறது என்றால் சர்வதேச சந்தையில் இருக்கும் விலையை விட ரஷியா மிக குறைந்த விலைக்கே கொடுக்கிறது. சீனாவுக்கு மட்டும் 30 சதவீத வரியை விதித்துள்ள டிரம்ப், வியட்நாமுக்கு 20 சதவீதம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு தலா 19 சதவீதம், ஜப்பான், தென்கொரியா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தலா 15 சதவீதம், இங்கிலாந்துக்கு 10 சதவீதம் என்று மட்டும் வரி விதித்து இருப்பதால் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலை அங்கு அதிகமாகும் என்பதால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.7 லட்சத்து 26 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி நடந்திருக்கிறது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 19.45 சதவீதமாகும். ஆக இந்தியாவின் ஏற்றுமதியில் 5-ல் ஒரு பகுதி பாதிப்புக்குள்ளாகும். இன்னும் ஆழமாக பார்த்தால் ஏற்றுமதி, உற்பத்தி குறைப்புக்கு வழிவகுக்கும். அது வேலைவாய்ப்பை அசைத்துவிடும்.
மத்திய-மாநில அரசுகளுக்கான ஜி.எஸ்.டி. வசூலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆக இந்த ஒரு அறிவிப்பு இந்தியாவின் பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் 25-ந்தேதி வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து ஒரு நல்ல முடிவு எட்டப்படவேண்டும்.






