வேகத்தடையா..? விபத்துமேடா..?

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருப்பது கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் சாலையில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது நமக்கு பெருமை என்றாலும், விபத்துகளின் எண்ணிக்கையில் முதல் இடத்திலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளில் 2-வது இடத்திலும் இருப்பது கவலை அளிக்கிறது. பெரும்பாலான விபத்துகளுக்கு வாகன ஓட்டிகளின் அதிக வேகமே காரணம். இதனால் சீறிப்பாயும் வாகனங்களுக்கு கடிவாளம் போடும்வகையில் அதிக விபத்து நடக்கும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன.
இதற்கு பல கட்டுப்பாடுகள், விதிகள் இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் வேகத்தடைகள் அமைக்கும்போது விதிகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள் அருகிலும், சிறிய சாலைகள் பெரிய சாலைகளோடு இணையும் இடங்கள், குறுகிய வளைவுகள், பாலங்களை நெருங்கும் இடங்களிலும், மக்கள் அதிகமாக சாலையை கடக்கும் இடங்களிலும் வேகத்தடைகள் அமைக்கவேண்டும்.
வேகத்தடைகள் மிக முக்கியமாக வாகனம் கடந்து செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடாமல் இருப்பதையும், அதில் உள்ள பாதுகாப்பு கூறுகள் உடைந்து போகாமல் இருப்பதையும், பிற ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும் என்ற விதி இருக்கிறது. வேகத்தடை அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் உயரமும், 3.7 மீட்டர் அகலமும் உடையதாக இருக்கவேண்டும்.
மேலும் அதன் இருபுறத்திலும் 10 மீட்டர் தூரத்துக்கு முன்பாக வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வெள்ளை நிற பெயிண்டால் எச்சரிக்கை கோடு வரையவேண்டும். வேகத்தடைகள் மீது கருப்பு, வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருக்கவேண்டும். அதன் சரிவு தொடங்கும் இடத்தில் இரவிலும் பிரகாசமாக தெரியும்படி ஒளிர்பட்டை விளக்கு பொருத்தப்பட்டிருக்கவேண்டும். வேகத்தடைகள் இருக்கும் இடத்துக்கு 40 மீட்டர் தூரத்துக்கு முன்னால் வாகன ஓட்டிகள் அறியும் வகையில் அறிவிப்பு பதாகைகள் அமைக்கவேண்டும்.
பல வேகத்தடைகள் அமைக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படும் நிலையில் இரண்டுக்கும் இடைவெளி 100 முதல் 120 மீட்டர் தூரம் இருக்கவேண்டும். மேலும் வேகத்தடைகளை அமைக்கவேண்டும் என்றால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறவேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாததால் வேகத்தடைகள் விபத்துகளை ஏற்படுத்தும் மேடுகளாக மாறிவிட்டன.
10 சென்டி மீட்டருக்கு மேல் உயரத்துடன் அமைக்கப்படுவதால் பெரும்பாலான கார்களின் அடிப்பாகங்கள் அதில் தட்டி பெரும் சேதத்தையும், பழுதையும் ஏற்படுத்துகின்றன. இதனால் அதிக விலை கொடுத்து கார்கள் வாங்க நினைப்பவர்கள் கூட, தாங்கள் செல்லும் வழியில் உள்ள வேகத்தடைகள் எப்படி இருக்கிறது? என்று பார்த்தே வாங்கும் நிலை இருக்கிறது. வேகமாக வரும் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள் ஏன் கார்கள் கூட விதிமுறையை மீறி எவரெஸ்ட் சிகரம் போல அமைக்கப்படும் வேகத்தடைகளை தாண்டும்போது நிலை தடுமாறி விபத்துகளை சந்திக்கவேண்டியது ஏற்படுகின்றது.
விபத்துகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட வேகத்தடைகளே விபத்துகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதாக அமைந்துவிடுகின்றன. எனவே இதுபோன்ற விபத்துகள், வாகன சேதங்களை தடுக்க ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரிகளும் தங்கள் எல்லையில் உள்ள வேகத்தடைகள் அனைத்து விதிகளையும் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து, விதியை மீறி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை சரிசெய்யவும், அனுமதி இல்லாமல் போடப்பட்டிருக்கும் வேகத்தடைகளை அகற்றவும் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். வேகத்தடைகள் வேகத்தை கட்டுப்படுத்தும் தடைகளாக மட்டும் இருக்கவேண்டுமே தவிர விபத்துகளை ஏற்படுத்தும் மேடைகளாக ஒருபோதும் இருக்கக்கூடாது.






