மாணவர்களுக்கு பத்திரிகை வாசிக்கும் பழக்கம்


மாணவர்களுக்கு பத்திரிகை வாசிக்கும் பழக்கம்
x

மாணவர்கள் செல்போனிலேயே மூழ்கி இருப்பதை மாற்றி பத்திரிகை படிப்பதில் ஈடுபட வேண்டும்.


70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தென்மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஒரு நல்ல பழக்கம் நீண்ட பல ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு நாளும் காலையிலேயே பிரார்த்தனை கூட்டம் நடக்கும் இடத்தில் ஒரு கரும்பலகையில் அன்றைய செய்தி பத்திரிகையில் வந்த அனைத்து முக்கிய செய்திகளும் எழுதப்பட்டு இருக்கும்.

பிரார்த்தனை முடிந்தவுடன் ஒரு மாணவர் அந்த செய்திகளை வரிசையாக படிப்பார். அதன்பிறகு ஒரு ஆசிரியர் ஒவ்வொரு செய்தியையும் மாணவர்களுக்கு விளக்கமளிப்பார். இப்படி அன்றைய கால கட்ட மாணவர்களுக்கு பத்திரிகை படிக்கும் வழக்கம் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது உள்ள மாணவர்களுக்கு பத்திரிகை படிக்கும் வழக்கம் மட்டுமல்ல, வாசிப்பு பழக்கமே போய் விட்டது.

பழைய காலங்களில் பள்ளிக்கூடம் முடிந்தபிறகும், விடுமுறை நாட்களிலும் நூலகங்களில் மாணவர்கள் கூட்டம் அலைமோதிய நிலை மாறி, இப்போது நூலகங்களில் கூட்டமே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசாங்கம் மாணவர்களுக்கு பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க ஒரு நல்ல முடிவை எடுத்து அரசு உத்தரவாக பிறப்பித்துள்ளது.

அனைத்து அரசு தொடக்க மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் ஆங்கில மற்றும் அவர்களின் தாய் மொழியான இந்தி செய்தி பத்திரிகைகளை வாசிப்பது தினசரி வாசிப்பு கலாசாரமாக இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் செல்போனிலேயே மூழ்கி இருப்பதை மாற்றி பத்திரிகை படிப்பதில் ஈடுபட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாணவர்களை தினமும் பத்திரிகை செய்திகளை வாசிக்க செய்வதால் அவர்களின் பொது அறிவு மேம்படும். மேலும் அவர்களின் பேச்சுத்திறனும், மொழித்திறனும் பொலிவு பெறும். பல்வேறு வகையான செய்திகள், கட்டுரைகள் மற்றும் தலையங்கங்களை படிப்பதன் மூலம் அவர்களின் எழுத்து திறமையும் அதிகரிக்கும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அந்த உத்தரவில் 9-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்கள் பத்திரிகைகளில் வந்த தலையங்கங்களை அடிப்படையாக வைத்து தங்கள் சொந்த எண்ணங்களை கட்டுரையாக எழுதச் சொல்ல வேண்டும் மற்றும் தங்களுக்குள் அதை குழு விவாதமாக வைத்து கலந்து பேச வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவை விசாலமாக்க பத்திரிகைகளை வாசிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச அரசாங்கம் பிறப்பித்துள்ள அந்த உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது.

தமிழக அரசும் மாணவ பருவத்திலேயே பத்திரிகை வாசிப்பு பழக்கத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. முந்தைய ஆண்டுகளில் நமது பள்ளிக்கூடங்களில் இருந்த பழக்கம்தான். அதற்கு உயிர் கொடுத்தாலே போதும். இதோடு பிரபல கல்வியாளரும், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் சொல்லிய கருத்து மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது.

இப்போதுள்ள கல்லூரி மாணவர்களிடம் உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. யார்? என்றால் தெரியவில்லை. இந்த நிலையை தவிர்க்க வீட்டுக்கு ஒரு பத்திரிகை என்பதை நடைமுறைப்படுத்தினால், அந்த வீட்டில் உள்ள மாணவர்களும் பத்திரிகை படிப்பார்கள். அவர்களின் பொது அறிவும் விசாலமாகும் என்று அவர் கூறிய நல் ஆலோசனையை அனைவரும் பின்பற்றினால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு வாசிப்பு பழக்கம் தானாகவே உருவாகி விடும்.

1 More update

Next Story