சரியான அறிவுரையை வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு


சரியான அறிவுரையை வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 5 Aug 2025 5:45 AM IST (Updated: 5 Aug 2025 5:49 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் 3 நீதிபதிகளும் வெளியிட்ட கருத்து மிக சிறப்பானதாகும்.

ஆதார் அட்டை அனைத்து சேவைகளுக்கும் அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. எல்லா இடங்களிலுமே ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் தேர்தல் கமிஷன் மட்டும் இவை மூன்றையும் அடையாள அத்தாட்சியாக ஏற்றுக்கொள்ள மறுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இவ்வளவுக்கும் வாக்காளர் அடையாள அட்டையை வாக்குப்பதிவுக்காக மக்களுக்கு வழங்கியது தேர்தல் கமிஷன்தான். அவர்கள் வழங்கிய அடையாள அட்டையை அவர்களே ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கூறுவது வினோதமாக மட்டுமல்ல, குழப்பமாகவும் இருக்கிறது. வருகிற நவம்பர் மாதம் 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த ஜூன் மாதம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்த பட்டியல் அடிப்படையில், தேர்தல் கமிஷன் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் பணியினை கடந்த மாதம் 26-ந்தேதி வரை நடத்தி முடித்து இருக்கிறது. இந்த பணிக்காக தேர்தல் கமிஷன் மேற்கொண்ட நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைக்கும் உள்ளாகியது. இதற்காக அந்த மாநிலத்தில் தேர்தல் கமிஷன் சார்பில் வீடு வீடாக சென்று ஒரு படிவத்தை கொடுத்தார்கள். அதை வாக்காளார்கள் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் அதில் பீகாரில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் தங்கள் பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், பள்ளி, கல்லூரி சான்றிதழ், நிரந்தர குடியிருப்பு சான்றிதழ், குடியுரிமைக்கான தேசிய பதிவேடு சான்றிதழ், அரசாங்கத்தின் மூலம் நிலம், வீடு ஒதுக்கீடுக்கான சான்றிதழ், அரசாங்க பென்ஷன் சான்றிதழ் உள்பட 11 சான்றிதழ்களில் ஒன்றின் நகல் இணைத்து தாக்கல் செய்யப்படவேண்டும் என்று கூறினர்.

இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் கிளம்பியது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலேயே தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் இது இந்தியர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை என்ற அரசியல் சட்டத்தின் உறுதிப்பாட்டை நிலை நிறுத்துவதற்கும், எந்த தொகுதியில் வசிக்கிறார்களோ அந்த தொகுதியில்தான் அவர்களுக்கு வாக்குரிமை என்பதை நிலை நாட்டுவதற்கும் இந்த முடிவு என்பது தேர்தல் கமிஷனின் கூற்று.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் 3 நீதிபதிகளும் வெளியிட்ட கருத்து மிக சிறப்பானதாகும். மேலும் கடந்த 10-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் தேர்தல் கமிஷன் நீதியை நிலை நாட்ட ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை ஆவணமாக எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால் தேர்தல் கமிஷன் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதார் என்பது குடியுரிமைக்கான ஆதாரம் கிடையாது, ரேஷன் கார்டுகளிலும் போலி இருக்கிறது என்று கூறி இந்த பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் இந்த ஆலோசனையை வலியுறுத்தியுள்ளது. கடந்த மாதம் 28-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதே கருத்தை கூறிவிட்டு தேர்தல் கமிஷனின் நடவடிக்கை பெருமளவில் வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதாக இருக்கவேண்டுமே தவிர, நீக்குவதாக இருக்கக்கூடாது என்று தெள்ளத்தெளிவாக கூறியது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 65 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.

செப்டம்பர் 1-ந்தேதி வரை கோரிக்கைகள் அல்லது ஆட்சேபனைகள் தெரிவித்து கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்தவேண்டும் என்றால் வாக்காளர்களின் பங்களிப்புதான் இன்றியமையாத ஒன்றாகும். பீகாரில் தேர்தல் கமிஷன் இதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காள தேர்தலிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும் என்பதால் சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் கோரிக்கையாக இருக்கிறது.

1 More update

Next Story