157 நாட்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் 157 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனையாகும்.
"அவசரப்பட்டு வழங்கப்பட்ட நீதி, புதைக்கப்பட்ட நீதி; தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி" என்பது வழக்குமொழி. ஆனால் அது இரண்டும் இல்லாமல் சரியானநேரத்தில் வழங்கப்பட்ட ஒரு நீதி சென்னை மகளிர் கோர்ட்டில் வழங்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்புக்குரியதாக இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி இரவு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரரான ஞானசேகரன் என்பவர் அங்கு வந்து அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததோடுமட்டுமல்லாமல், அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்தார். இந்த கொடுமையை அனுபவித்த மாணவி அடுத்த நாள் 24-ந்தேதி போலீசில் புகார் செய்தார். கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடனடியாக ஞானசேகரனும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஞானசேகரன் தி.மு.க. அனுதாபி என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் வரலட்சுமி என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். சென்னை ஐகோர்ட்டு உடனடியாக அதாவது, 28-ந்தேதி பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளான சினேகபிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகிய மூன்று அதிகாரிகளைக்கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தது. இந்த வழக்கை பெண் அதிகாரிகள் கொண்ட குழு விசாரித்தால்தான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்ற நல்ல முடிவை எடுத்த சென்னை ஐகோர்ட்டு அனைவராலும் பாராட்டப்பட்டது. முதல் நடவடிக்கையாக ஞானசேகரன் 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
பொதுவாக ஒரு வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. ஆனால் அதற்கு முன்னதாகவே அதாவது, 60 நாட்களில் பிப்ரவரி 24-ந்தேதி சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 100 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது நிச்சயம் முத்திரை பதிக்கத்தக்கதாகும். மார்ச் 7-ந்தேதி இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிபதி ராஜலட்சுமி முன்பாக வந்த இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை ஏப்ரல் 23-ந்தேதி தொடங்கியது. மிகவும் சிறப்பு என்னவென்றால், தினமும் விசாரணை நடந்தது. காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். குற்றத்தை நிரூபிக்க 75 சாட்சி ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. மே 20 முதல் 23-ந்தேதி வரை இருதரப்பினரின் இறுதிவாதம் நிறைவுபெற்றது. 23-ந்தேதி விசாரணை முடிவடைந்தது. விசாரணை முடிந்து 5 நாட்களில் என்பது மட்டுமல்லாமல், சம்பவம் நடந்து 157 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனையாகும்.
ஞானசேகரன் மீது பதிவுசெய்யப்பட்ட 'பாரதிய நியாய சன்ஹிதா' (இந்திய தண்டனை சட்டம்) தகவல் தொழில்நுட்பச்சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் 12 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில், 11 பிரிவுகளில் எந்தவித சந்தேகத்துக்கிடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என்று கூறிய நீதிபதி ராஜலட்சுமி, என்ன தண்டனை? என்பதை ஜூன் 2-ந்தேதி (நாளை மறுநாள்) அறிவிப்பதாக கூறிவிட்டார். இந்த வழக்கில் புலன்விசாரணை செய்த சிறப்பு புலனாய்வுக்குழுவினரும், நீதிமன்ற விசாரணையை நடத்திய நீதிபதி ராஜலட்சுமியும் குறிப்பிட்ட காலவரைக்குள்ளேயே திறம்பட பணியாற்றி அனைத்து வழக்குகளுக்கும் முன்மாதிரியான புலன்விசாரணை மற்றும் வழக்குவிசாரணை என்ற பெயரை பெற்றுவிட்டார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு 76 மாதங்கள் ஆகிய நிலையில், இந்த வழக்குக்கு 5 மாதங்களில் புலன்விசாரணையும் முடிந்து, குற்றவாளிக்கு தண்டனையும் வழங்கப்பட்டது நீதிமன்ற வரலாற்றில் மேற்கோள்காட்டக்கூடிய தீர்ப்புகளில் இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.






