தலைகீழாக மாறிய உலக அரசியல்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே உலகம் பல அதிர்வுகளை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் அனுமதியில்லாமல் வசித்து வரும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை வெளியேற்றியது. அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது என அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ரஷியாவிற்கும், உக்ரைனுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு கரம் நீட்டி ஆயுதங்களை சப்ளை செய்து, நிதியும் அளித்து வந்தது. ஆனால் இப்போது டிரம்ப் பதவிக்கு வந்தவுடன், இந்த நிலை அப்படியே மாறிவிட்டது. அமெரிக்காவும், ரஷியாவும் எதிரும் புதிருமாக பரம எதிரிகளாக இருந்த நிலைமாறி இப்போது டிரம்பின் குரலில் வித்தியாசம் தெரிகிறது. ரஷியாவுடன், நட்புக்கரம் நீட்டும் வகையில் அதிபர் விளாடிமிர் புதினுக்கு புகழாரம் சூட்டி பேசுகிறார். தேர்தலுக்கு முன்பு நான் அமெரிக்கா ஜனாதிபதியானால் ஒரே நாளில் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்றார். ஆனால் பதவிக்கு வந்தவுடன் இதற்கு 100 நாட்கள் ஆகும் என்று பல்டி அடித்து பேசினார். டிரம்ப், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியாவை மிரட்டுவார் என்று உலகமே எதிர்பார்த்த நிலையில் அவருடைய பேச்சு தனது நட்பு நாடான உக்ரைனுக்கு எதிராக மாறியுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இந்த போரில், அமெரிக்கா உக்ரைனுக்கு 350 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.30 லட்சம் கோடி) வழங்கி இருக்கிறது. எனவே அதற்கு ஈடாக உக்ரைனில் இருந்து கனிம வளங்களை எடுப்பதற்கு அமெரிக்காவோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டினார். இந்த சூழ்நிலையில் கடந்த சனிக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்த டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது துணை ஜனாதிபதி ஜே.டி.வான்சும் உடன் இருந்தார். அதன்பின் அவர்கள் அனைவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது உலக அரசியல் இதுவரை பார்க்காத காட்சிகள் எல்லாம் அரங்கேறியது. ஜெலன்ஸ்கியை டிரம்பும், வான்சும் திட்டித்தீர்த்தனர். டிரம்ப், நீங்கள் மூன்றாம் உலகப்போர் வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்றார். துணை ஜனாதிபதி வான்ஸ் ஒரு படி மேலே போய், ஜெலன்ஸ்கியை நாங்கள் உங்களுக்கு எவ்வளவோ உதவி செய்து இருக்கிறோம். ஆனால் எப்போதாவது நன்றி சொல்லியிருக்கிறீர்களா?. நீங்கள் நன்றி இல்லாதவர் என்றார்.
இதற்கு விரக்தியுடன் பதில் அளித்த ஜெலன்ஸ்கி, நீங்கள் பேசுவது ரஷிய அதிபர் புதினின் கருத்தை எதிரொலிப்பது போல் இருக்கிறது என்று நொந்துபோய் பேசினார். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பில் இதுபோன்ற கடுமையான வார்த்தைகள் கொண்ட மோதல்கள் இதுவரை நடந்தது இல்லை. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். அவரை டிரம்ப் வெளியேற்றினாரா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த பேச்சுவார்த்தை ஒரு குழாயடி சண்டை போல நடந்து முடிந்து இருக்கிறது. ஆனால் ரஷியா இதையெல்லாம் ரசித்துக்கொண்டு இருக்கிறது. மொத்தத்தில் உலக நாடுகளின் கவலை ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வந்து விடுமா? அல்லது டிரம்ப் சொன்னது போல மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துவிடுமா? என்பது தான்.






