மோந்தா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
மோந்தா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
Published on

சென்னை,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை பகுதி கடந்த 26-ந் தேதி புயலாக வலுப்பெற்றது. மோந்தா என பெயரிடப்பட்டு இருந்த இந்த புயலை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கினர். இதனால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

மேலும் சென்னை அருகே மோந்தா புயல் கரையை கடக்கக்கூடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே புயல் நகர்ந்தது. பின்னர் காக்கிநாடாவில் இருந்து 200 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் மோந்தா புயல் நிலைகொண்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை அதிதீவிர புயலாக மோந்தா புயல் வலுவடைந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் காக்கிநாடா அருகே கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று வீசியது. மேலும் அங்கு விடிய, விடிய இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவின் காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, அம்பேத்கர் கோனசீமா, அல்லூரி சீதாராம ராஜூ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் தங்கியிருந்த 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். கடலோர பகுதியில் புயல் கரையை கடக்கும் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் காக்கிநாடாவின் மசூலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினம் அருகே மோந்தா புயல் கரையை கடந்தது. புயல் காரணமாக மசூலிப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய கடலோர பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. மேலும் இடி, மின்னலுடன் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில், ஆந்திராவில் கரையைக் கடந்த மோந்தா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, வடக்கு வடமேற்கு திசையில் ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கரை கடந்து நகரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com