சென்னைக்கு அருகில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு அருகில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’
Published on

சென்னை,

'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், நகர் முழுவதும் கனமழை பெய்தது. சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு அருகே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும், அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதன் தீவிரத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்றும், அதன் பிறகு, கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 5 மாவட்டங்களுக்கு இன்று (02-12-2025) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி

ஆரஞ்சு அலர்ட்

சென்னை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

ராணிப்பேட்டை

மஞ்சள் அலர்ட்

வேலூர்

திருவண்ணாமலை

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி

திருப்பத்தூர்

கடலூர்

புதுச்சேரி

நாளை (03-12-2025) கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

ஆரஞ்சு அலர்ட்

ஈரோடு

நீலகிரி

கோவை

மஞ்சள் அலர்ட்

சேலம்

நாமக்கல்

திருப்பூர்

திண்டுக்கல்

தேனி

தென்காசி

நெல்லை

கன்னியாகுமரி

இந்நிலையில் கனமழை தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:-

ஆந்திராவுக்கு செல்லும் என கணிக்கப்பட்ட டிட்வா புயல், சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டதே அதீத மழைக்கு காரணம். நாளை காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாமல்லபுரம் அருகே பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் மட்டும் 11 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. குழுவிற்கு 30 பேர் என 330 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தற்போது தயார் நிலையில் உள்ளனர்.

டிட்வா புயலால் சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்தனர். மாநிலம் முழுவமும் 85,521.76 ஹெக்டேர் விலை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை நின்ற பின் பயிர்கள் கணக்கெடுப்பு முழுமையாக மேற்கொள்ளப்படும். முதல்-அமைச்சர் அறிவித்தபடி கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்த விலை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 582 கால்நடைகள் உயிரிழந்தன. கால்நடைகளுக்கான நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில்..

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ., ஸ் அவுஸில் 23.1 செ.மீ, பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ, மணலி புதுநகர் 20.6 செ.மீ., வடபழனி 18.1 செ.மீ., மேடவாக்கம் 17.7 செ.மீ., விம்கோ நகர் 17.6 செ.மீ., தண்டையார்பேட்டை 17.2 செ.மீ., கத்திவாக்கம் 16.8 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com