வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கோவை, நீலகிரிக்கு இன்று "ஆரஞ்சு அலர்ட்"


வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 28 May 2025 7:04 AM IST (Updated: 28 May 2025 8:54 AM IST)
t-max-icont-min-icon

கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது. இதன் காரணங்களால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், இன்று (28-05-2025) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாளையும், நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அதிகபட்ச மழைப்பதிவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 'அவலாஞ்சி 35 செ.மீ., மேல்பவானி 30 செ.மீ., சின்னக்கல்லார் 21 செ.மீ., எமரால்டு 18 செ.மீ., கூடலூர் பஜார் 15 செ.மீ., விண்ட்வொர்த் எஸ்டேட், பந்தலூர் தாலுகா அலுவலகம் 14 செ.மீ., மேல் கூடலூர், சிறுவாணி அடிவாரம், வால்பாறை தலா 13 செ.மீ., சின்கோனா 12 செ.மீ., குந்தா பாலம், உபாசி, கிளன்மார்கன், வூட் பிரையர் எஸ்டேட் தலா 11 செ.மீ., செருமுல்லி, சோலையார் தலா 10 செ.மீ.' உள்பட பல இடங்களில் மழை பெய்திருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (28-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

28-05-2025 முதல் 31-05-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

28-05-2025 முதல் 30-05-2025 வரை: தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளிலும், மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு-மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

31-05-2025: வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடக்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

28-05-2025 முதல் 31-05-2025 வரை: தென்மேற்கு மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு மத்தியகிழக்கு அரபிக்கடல், கொங்கன்- கோவா, கர்நாடக-கேரள கடலோரப்பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

1 More update

Next Story