நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வாளர் தகவல்

மோந்தா புயல் தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழையை கொடுத்தது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் போன்ற நிகழ்வுகளால் மழைக்கான வாய்ப்பு அதிக அளவில் இருக்கும். ஆனால் நடப்பாண்டில் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே ‘மோந்தா' புயல் உருவாகி, ஆந்திரா நோக்கி சென்றது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழையை கொடுத்தது. தற்போது பருவமழை சற்று இடைவெளி விட்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதியில் இருந்து மீண்டும் பருவக்காற்று திரும்பி, 15-ந் தேதிக்கு பிறகு மழை தீவிரம் எடுக்கவுள்ளது. வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்திருக்கிறார். அதாவது, புயல் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் (தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம்) உருவாவதற்கும், கடல் சார்ந்த அலைவுகளை ஈர்ப்பதற்கும் கடலின் வெப்பநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது வங்கக்கடலில் தற்போது சாதகமாக உள்ளது.
கிழக்கிந்திய பெருங்கடலில் சுமத்ரா கடற்கரை அருகே கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், அதேநேரத்தில் சோமாலியா கடற்கரை அருகே குளிர்ச்சி நீடிப்பதும் போன்ற சாதகமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு இந்திய பெருங்கடல் இருமுனை எதிர்மறை நிகழ்வு (நெகட்டிவ் ஐ.ஓ.டி.) என சொல்லப்படுகிறது. இது அடுத்துவரும் 2 வாரங்களில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
ஏற்கனவே இதேபோன்ற நிகழ்வு 2019-ம் ஆண்டில் நிகழ்ந்தபோது, அரபிக்கடலில் அடுத்தடுத்த வானிலை நிகழ்வுகள் உருவாகின. அதில் ஒன்று ‘சூப்பர்’ புயலாகவும், ஒன்று அதி தீவிர புயலாகவும், ஒன்று மிக தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இதுதவிர மற்றவை தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலங்களாக உருவானது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் தற்போதைய கடல் வெப்பநிலை அதிகரிப்பு எதிரொலியாக வங்கக்கடலில் அடுத்தடுத்த தொடர் நிகழ்வுகளும், வலுவான புயலும் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது நல்ல மழையை கொடுக்கும் நிகழ்வுகளாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.






