‘உக்ரைனுக்காக பேச வரவில்லை’ - புதினை சந்திப்பதற்கு முன் டிரம்ப் பேட்டி

உயிர்களை காப்பாற்றுவதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவர உழைத்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
லண்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக நடப்பு ஆண்டு ஜனவரியில் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிற உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல முறை பேசினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் இன்று(15-ந்தேதி) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசுகின்றனர். இந்த நிலையில், அலாஸ்கா செல்வதற்கு முன் விமான நிலையத்தில் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “உக்ரைனுக்காக பேச நான் வரவில்லை. ரஷிய அதிபர் புதினை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே இலக்கு. தொடர் தாக்குதல்களை நடத்துவதே தங்கள் பலம் என்று புதின் நம்புகிறார். புதினுடனான பேச்சுவார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். உயிர்களை காப்பாற்றுவதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவர நான் உழைத்து வருகிறேன். ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்றால் ரஷியா கடுமையான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளும்” என்று தெரிவித்தார்.






