ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்: பெரும் சேதம்.. பாதுகாப்புப் படையினர் 30 பேர் பலி

கலவரங்களில் 30 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதை இஸ்பஹான் மாநில கவர்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்பகான் [ஈரான்],
ஈரான் நாட்டில் உச்சபட்ச தலைவராக அயோதுல்லா அலி காமேனி இருந்து வருகிறார். அந்நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.
மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 வாரங்களாக நடந்து வரும் இந்த ஆர்ப்பாட்டம் இன்றும் நீடிக்கிறது. அவர்களை ஒடுக்கவும், ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் முயற்சியாகவும் பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஈரானில் நடப்பது என்ன என்பது பற்றி வெளியுலகிற்கு சரிவர தெரியாத வகையில் செய்திகளும் முடங்கி உள்ளன. இதனால், தங்களுடைய நண்பர்கள், உறவினர்களுடன் மக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. சில அரசு ஊடங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இஸ்பஹான் மாகாணத்தில் வெளிநாடுகளின் ஆதரவுடன் நடந்ததாக கூறப்படும் கலவரத்தின்போது 30 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததை அந்த மாகாணத்தின் கவர்னர் அலி அஹ்மதி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்துப் பேசிய அஹ்மதி, கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினருக்கான இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று கூறினார். இந்த வன்முறையின் போது இரண்டு மாதக் குழந்தை உட்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்தக் கலவரங்களால் இஸ்பஹானில் உள்ள 10 மசூதிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால், பெரும் சேதம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.






