கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம் - மார்க் கார்னி திட்டவட்டம்

சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
ஒட்டாவா,
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார். இதற்கு கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனிடையே சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் டிரம்ப், மார்க் கார்னி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது டிரம்ப் அறிவித்த அமைதி வாரியத்தில் இணைய கார்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று அமைதி வாரியத்தில் இணைய கார்னி ஒத்துக்கொண்டார்.
மேலும் அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்து கொள்ளவும் கார்னி ஒரு வாய்ப்பாக இதனை கருதினார். இருப்பினும் டிரம்ப் அவருடைய கோரிக்கையை நிராகரித்தார். மேலும் டிரம்ப் இது “பெரிய தலைவர்களுக்கான உருவாக்கப்பட்ட மிக உயரிய குழு, இதில் கனடாவுக்கு இடமில்லை” என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும் அவர் பொதுமேடையில் “கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது” என்றார். இதனால் சுவிட்சர்லாந்தில் இருந்து பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
பின்னர் கியூபெக் திரும்பிய அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர். அதில் அவர் "கனடா அமெரிக்காவால் உயிர் வாழ்வதில்லை. நாங்கள் கனடியர்கள் என்பதால்தான் கனடா செழிக்கிறது." என்றார். பின்னர் அமெரிக்கா-கனடா இடையிலான நீண்டகால உறவைப் பாராட்டிய கார்னி, அதே நேரத்தில், எங்கள் வீட்டின் உரிமையாளர்கள் நாங்களே. இது எங்கள் நாடு; எங்கள் எதிர்காலம்; முடிவு எங்களிடமே உள்ளது. மேலும், நடுத்தர சக்தி நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், பெரும் சக்திகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகவும், சுங்க வரிகளை அழுத்தம் செலுத்தும் கருவியாகவும், நிதி கட்டமைப்புகளை கட்டாயப்படுத்தும் சாதனமாகவும், விநியோகச் சங்கிலிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பலவீனங்களாகவும் மாற்றத் தொடங்கி உள்ளன, என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு டிரம்ப் கடும் பதிலடி கொடுத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என்ன நினைத்துக்கொண்டுள்ளார் என தெரியவில்லை. எங்கள் தயவு இல்லாமல் சீனாவை சார்ந்து இருக்க விரும்புகிறாரா கவர்னர் கார்னி. சீனப்பொருட்களை கனடாவில் இறக்குமதி செய்தால் அவர்கள் போகிற போக்கில் உங்களை விழுங்கிவிடுவார்கள். அதனை மீறி நீங்கள் சீனா உடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டால் உங்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கப்படும்” என்றார். முன்னதாக அமெரிக்காவின் அடுத்தக்கட்ட பாதுகாப்பு அம்சமான தங்க கவசத்தில் இணைய கனடா மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில் டிரம்ப் மிரட்டலுக்கு பதிலடியாக ‘சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்' என நாட்டு மக்களுக்கு கனடா பிரதமர் வீடியோ வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோவில் அவர் கூறுகையில், “வெளிநாட்டு அச்சுறுத்தலை சமாளிக்க 'கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம்'. மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம்” என்று மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.






