உக்ரைனுக்கு எதிரான போரில் 200 கென்யர்களை ஈடுபடுத்திய ரஷியா

ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா சுமார் 11 ஆயிரம் வீரர்களை அனுப்பியது.
நைரோபி,
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தபோரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ரஷியாவும், உக்ரைனும் ஒருவொருக்கொருவர் மாறி, மாறி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரிய ராணுவ வீரர்கள் அங்கு சென்று போரில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் வடகொரியாவும் சுமார் 11 ஆயிரம் வீரர்களை அனுப்பியதை ஒப்புக்கொண்டது.
இந்தநிலையில் தற்போது கென்யாவை சேர்ந்த 200 பேரையும் ரஷியா போரில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் முறையான பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்கள் போரில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.






