வானிலை அவசரநிலை: இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பி விட உத்தரவு; ரெயில் சேவையும் பாதிப்பு

டிட்வா புயல், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், வருகிற 30-ந்தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொழும்பு,
இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 17-ந்தேதி முதல் பெய்து வரும் மழையால் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக, பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. இதனால், மீட்பு பணிகளை முடுக்கி விடும்படியும் மற்றும் தடையில்லா நிவாரண உதவி கிடைக்கவும் வழி செய்திடும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகே உத்தரவிட்டு உள்ளார். மீட்பு பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி அனுர கருணாதிலகே வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைக்கு வரக்கூடிய அனைத்து விமானங்களும், வானிலை அவசரநிலையால் பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் போனால், இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் அல்லது கொச்சி விமான நிலையங்களுக்கு அவை திருப்பி விடப்படும் என தெரிவித்து உள்ளார்.
ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகளில் ரெயில்வே தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனை முன்னிட்டு, பட்டிகலோவா மற்றும் திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொழும்பு மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி மற்றும் இரவு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த ரத்து அறிவிப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும் பெரிதும் அவதியடைந்து உள்ளனர்.
இதற்கேற்றார் போன்று, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் இன்று புயல் உருவாகி உள்ளது. அதற்கு டிட்வா என பெயரிடப்பட்டு உள்ளது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே தற்போது 700 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், அடுத்த 48 மணிநேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், வருகிற 30-ந்தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






