உலகம் ஒரு பார்வை: 2025-ம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
2025-ம் ஆண்டில் உலகத்தில் நடந்த போர்கள், பேரிடர் பாதிப்புகள், தாக்குதல்கள் உள்ளிட்ட நிகழ்வுகளின் தொகுப்புகளை காணலாம்.
ஜனவரி 7, 2025
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதிக தொற்றும் தன்மை கொண்ட எச்5என்1 ரக வைரசின் தாக்குதலுக்கு ஆளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
ஜனவரி 7, 2025
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து, 6 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயமடைந்தனர்.
இதன் தாக்கம், அருகிலுள்ள இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்த மின்விசிறி, விளக்குகள் நிலநடுக்க பாதிப்பால் லேசாக அசைந்தன. இதனை தொடர்ந்து, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
ஜனவரி 9, 2025
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டனர்.
வார தொடக்கத்தில் இருந்து காட்டுத்தீயானது 15 ஆயிரம் ஏக்கர் வன பகுதிகள் வரை பரவி வருகிறது. இதுவரை 10 ஆயிரம் ஏக்கர் பகுதிகள் எரிந்து விட்டன. ரூ.4.46 லட்சம் கோடி முதல் ரூ.4.89 லட்சம் கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதில், லாட்டரியில் ஜாக்பாட் பரிசு தொகையை பெற்ற எட்வின் என்பவரின் 25.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.219.80 கோடி) மதிப்பிலான, ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் அமைந்த ஆடம்பர பங்களா எரிந்து போயுள்ளது.
ஹாலிவுட் பிரபலங்களான ஆடம் பிராடி, லெய்டன் மீஸ்டர், பெர்கீ, அன்னா பாரிஸ், அந்தோணி ஹாப்கின்ஸ் மற்றும் ஜான் குட்மேன் உள்ளிட்டோரும் அவர்களுடைய வீடுகளை இழந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லெய்டனின் ரூ.55.85 கோடி மதிப்பிலான வீடும் எரிந்து சேதமடைந்தது. அதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது.
இதேபோன்று, பிரபல நடிகர்களான மார்க் ஹாமில், மாண்டி மூர் மற்றும் ஜேம்ஸ் உட்ஸ் உள்ளிட்டோரும் காட்டுத்தீயால் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். பாலிசேட்ஸ் கடற்கரை பகுதியில் அமைந்த நடிகர் கேரி எல்விஸ் வீடும் தீயில் எரிந்து போனது. பிரபல மாடல், பாடகி மற்றும் நடிகையான பாரீஸ் ஹில்டனின் மாலிபு பகுதியில் உள்ள வீடும் எரிந்து சேதமடைந்தது.
ஜனவரி 13, 2025
ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் இந்திய நேரப்படி இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
இது 37 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
ஜனவரி 15, 2025
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், தி பாலிசேட்ஸ் பகுதியில் 8 பேரும், ஈட்டன் பகுதியில் 17 பேரும் என 25 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஜனவரி 18, 2025
ஹசீனா பேசிய ஆடியோ உரை ஒன்று, வங்காளதேச அவாமி லீக் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், அவருடைய இளைய சகோதரி ஷேக் ரெஹானா மற்றும் ஹசீனா இருவரும் 20 முதல் 25 நிமிடங்களில் மரணம் நேரிடுவதில் இருந்து தப்பிய விவரங்களை கூறியுள்ளார். கடந்த காலங்களில் பல்வேறு முறை அவரை கொல்ல சதி திட்டங்கள் தீட்டப்பட்டன என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
அந்த பதிவில், ஆகஸ்டு 21-ந்தேதி படுகொலையில் இருந்து தப்பினேன் என்றே நான் உணர்கிறேன். கொதலிபாராவில் நடந்த பெரிய வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பினேன். 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதியும் படுகொலையில் இருந்து உயிர் தப்பியுள்ளேன். அல்லாவின் கருணையும், கரமும் நிச்சயம் உள்ளது என தெரிவித்து உள்ளார். அப்படி இல்லையெனில், இந்த முறை நான் உயிர் பிழைத்து இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
ஜனவரி 20, 2025
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார்.
நவம்பர் மாதமே தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும் அமெரிக்க அரசியலமைப்பின்படி ஒவ்வொரு ஜனாதிபதியின் பதவி காலமும் ஜனவரி 20-ந் தேதியில்தான் தொடங்கும். அந்த வகையில் இந்திய நேரப்படி அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஜனவரி 20, 2025
ஒரேயொரு இரவு விருந்தில் ரூ.2 ஆயிரம் கோடி அள்ளி டிரம்ப் புதிய சாதனை
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்டார். விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு டிரம்ப் அளித்த இரவு விருந்தில் இந்தியாவில் இருந்து தொழிலதிபரான முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீடா அம்பானி உள்பட உலகம் முழுவதுமுள்ள கோடீசுவரர்கள் சென்றிருந்தனர்.
டிரம்புடனான இரவு விருந்து நிகழ்ச்சி, ஒரு நிதி திரட்டும் நிகழ்வாக அமைந்தது. இதன்படி, 5 வகையான டிக்கெட்டுகள் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 ஆயிரம் டாலர்கள் முதல் அதிகபட்சம் 1 மில்லியன் டாலர்கள் வரை அவற்றின் விலை இருக்கும். அவரவர் விருப்பத்திற்கேற்ப டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

டிரம்ப் கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியேற்பின்போது நடத்திய இரவு விருந்து நிகழ்ச்சியில் 106 மில்லியன் டாலர் தொகை ஈட்டப்பட்டது. அதன்பின்னர், பைடன் ஜனாதிபதியாக பதவியேற்றபோது, 135 மில்லியன் டாலர் தொகை கிடைத்தது. இந்த முறை இந்த தொகை 267 மில்லியன் டாலராக (ரூ.2 ஆயிரம் கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.
ஜனவரி 22, 2025
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் ஏற்படுத்தியது. இதனால் டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழிவும் காணப்பட்டது.
அந்நாட்டில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், முன்னெப்போதும் காணப்படாத பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 4 பேர் பலியானார்கள்.
ஜனவரி 29, 2025
சூடானில் ஏற்பட்ட விமான விபத்தில் 20 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர் சீனாவையும், ஒருவர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஜனவரி 30, 2025
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான 30 சதவீத இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் அடைவோம் - இஸ்ரேல்
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான 30 சதவீத இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் அடைவதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது என இஸ்ரேல் நாட்டு ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்பு துறைக்கான மந்திரி கூறியுள்ளார். இஸ்ரேலின் ஆற்றல் பாதுகாப்புக்கு இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கும் என்று அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

2035-ம் ஆண்டுக்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான விரிவானதொரு செயல் திட்டம் வகுப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனால், கார்பன் வெளிப்பாடு குறைவதுடன், காற்று மாசு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 1, 2025
அமெரிக்காவில் சட்டவிரோத வகையில் பென்டனைல் எனப்படும் மருந்து பொருள் விநியோகிக்கப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பென்டனைல் என்ற மருந்து பொருள் வலி நிவாரணியாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனால், கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து, இந்த பென்டனைலை விநியோகித்ததற்காக கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு வரிகளை விதிப்பது என புதிதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதன்படி, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் மீது 25 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்பட உள்ளது. சீனா மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 5, 2025
சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகருக்கு மேற்கே கல்வி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்ற பெயரிடப்பட்ட அந்த பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட தொடங்கினார்.
இதனால், மாணவர்கள் அனைவரும் நாலாபுறமும் தப்பியோடினர். இந்த தாக்குதலில், 10 பேர் பலியானார்கள். துப்பாக்கியால் சுட்ட நபரும் பின்னர் மரணம் அடைந்து பள்ளி வளாகத்திலேயே கிடந்துள்ளார். அவர் எப்படி பலியானார் என்ற விவரம் வெளிவரவில்லை. இந்த தாக்குதலுக்கான பின்னணி உள்ளிட்ட விவரமும் தெரிய வரவில்லை.
சுவீடனில் பள்ளிகளில் துப்பாக்கி சூடு நடத்தப்படுவது என்பது மிக அரிது. இந்த சம்பவம் தொடர்ச்சியாக, அரண்மனை மற்றும் அரசு கட்டிடங்களில் அரை கம்பத்தில் கொடிகளை பறக்க விடும்படி, அரசர் கார்ல் மற்றும் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் உத்தரவிட்டனர்.
பிப்ரவரி 6, 2025
ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே அமீரகம் சார்பில் நடந்த 12-வது சமாதான முயற்சியால் இரு நாடுகளை சேர்ந்த 300 பணய கைதிகள் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
பிப்ரவரி 9, 2025
கேமேன் தீவில் இன்று மாலை 4.53 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகி உள்ளது.
பிப்ரவரி 13, 2025
தைவானில் தைசங் நகரில் ஷின் கோங் மித்சுகோஷி என்ற பெயரிலான பல்பொருள் அங்காடி ஒன்று 12-வது தளத்தில் இயங்கி வருகிறது. இதில், உணவு விற்பனை செய்யும் பகுதியில் திடீரென இன்று காலை கியாஸ் வெடிப்பு ஏற்பட்டது. இதில், கட்டிடத்தின் வெளிப்புற பகுதிகள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் சீனாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட மக்காவ் பகுதியில் இருந்து வந்துள்ளனர்.
பிப்ரவரி 19, 2025
ஆஸ்திரேலியாவின் தீவு மாகாணங்களில் ஒன்றான தாஸ்மானியாவின் வடமேற்கு கடற்கரையோர பகுதியில், 150-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் நேற்று மதியம் கரையொதுங்கின. இதனை தொடர்ந்து, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் அந்த பகுதிக்கு சென்று அவற்றை கடலுக்குள் மீண்டும் கொண்டு சென்று விடும் பணியில் ஈடுபட்டனர்.
பிப்ரவரி 26, 2025
தாய்லாந்து நாட்டில் கல்வி சுற்றுலா சென்ற இடத்தில் பஸ் விபத்தில் சிக்கியதில் 18 பேர் பலியானார்கள்.
பிப்ரவரி 24, 2025
பிரான்ஸ் நாட்டின் மார்சே நகரில் ரஷிய தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த தூதரகத்தில் திடீரென இன்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலின் அறிகுறிகளாகும் என ரஷியா தெரிவித்து உள்ளது.
மார்ச் 2, 2025
பொலிவியா நாட்டில் ஆருரோ பகுதியில் பெரிய திருவிழா கொண்டாட்டம் ஒன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சிலர் பஸ்களில் புறப்பட்டனர். அப்போது, அவற்றில் ஒரு பஸ் பொடோசி என்ற பகுதியில் வந்தபோது திடீரென விபத்தில் சிக்கியது.
உயுனி மற்றும் கொல்சானி இடத்திற்கு இடையே சென்றபோது அந்த சுற்றுலா பஸ், எதிர்திசையில் உள்ள சாலைக்கு சென்று மோதியதில் 37 பேர் பலியாகி உள்ளனர். சுற்றுலா பஸ் விபத்தில் சிக்குவதற்கு முன்பு அதன் ஓட்டுநர் மதுபானம் குடித்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை பயணிகள் தெரிவித்தனர்.
மார்ச் 5, 2025
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஷாத்நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரவீன். ராகவலு மற்றும் ரமாதேவி தம்பதியின் மகனான பிரவீன், 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் உயர் கல்வி படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். மில்வாகீ பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.
அவர் படிக்கும்போதே பகுதி நேர பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் சொந்த ஊருக்கு வந்து விட்டு, ஜனவரியில் அமெரிக்காவுக்கு திரும்பியிருக்கிறார். வருகிற ஆகஸ்டில் அவருடைய படிப்பு முடிய இருந்தது. இந்நிலையில், அவர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
மார்ச் 9, 2025
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் செவன் நியூஸ் என்ற தொலைக்காட்சி சேனலின் நிருபர் ஹெய்டன் நெல்சன், சூரிய உதயம் என்ற காலை நிகழ்ச்சிக்காக தயாரானார். அவர் ரன்டில் என்ற வணிக வளாகத்தில் இருந்தபடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டு இருந்துள்ளார்.
பொதுமக்கள் அதிகம் வரக்கூடிய வணிக வளாகங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களின் விகிதங்களை புள்ளி விவரங்களுடன் வழங்கி கொண்டிருந்தபோது ஹெய்டனையும், அவரை படம் பிடித்து கொண்டிருந்த கேமராமேனையும் மர்ம நபர் ஒருவர் அணுகி, வாழ்த்துகளை கூறி விட்டு நகர்ந்துள்ளார்.
இவர்களும் தொடர்ந்து நிகழ்ச்சியை லைவ்வாக நடத்தி கொண்டிருந்தனர். ஆனால், யாரும் கவனிக்காத வகையில், அந்த நபர் லைவ் நிகழ்ச்சிக்காக ஸ்டாண்டின் மீது வைக்கப்பட்டு இருந்த 3 லைட்டுகளில் (விளக்கு) ஒரு லைட்டை கையோடு எடுத்து சென்று விட்டார். இந்த திருட்டை அப்போது ஒருவரும் கவனிக்கவில்லை.
சிறிது நேரம் கழித்தே லைட் திருடு போனது தெரிய வந்தது. இதனையும் நிகழ்ச்சியின்போது குறிப்பிட்ட ஹெய்டன், இதில் இருந்து குற்ற செயல்கள் எந்தளவுக்கு நடக்கின்றன என நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என கூறினார். அந்த லைட் எதற்காக பயன்படுகிறது என்பதோ அல்லது அதன் மதிப்பு என்னவென்றோ அதனை எடுத்து சென்றவருக்கு ஒன்றும் தெரியாது என்றும் ஹெய்டன் வருத்தத்துடன் கூறினார்.
மார்ச் 10, 2025
ரஷிய அதிபர் புதின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பிஜஷ்கியான் இடையே கடந்த ஜனவரியில், வர்த்தகம் மற்றும் ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இந்த சூழலில், ஈரான், சீனாவுடனான கூட்டு கடற்பயிற்சியில் ரஷியா ஈடுபட உள்ளது.
இதுபற்றி சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பாதுகாப்பு வளையம்-2025 என்ற பெயரில் மார்ச் மாத இறுதியில், இந்திய பெருங்கடலில் ஈரான் நாட்டுக்கு பக்கத்தில் சீனா மற்றும் ஈரானுடன் சேர்ந்து ரஷியா கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபட உள்ளது என தெரிவித்து உள்ளது.
மார்ச் 11, 2025
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்தி, பயணிகளை சிறைபிடித்த போராளிகள் 30 ராணுவ வீரர்களை படுகொலை செய்துள்ளனர்.

மார்ச் 19, 2025
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்.) இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லயம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 விஞ்ஞானிகளும் அமெரிக்காவை சேர்ந்த நாசா அமைப்பின் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவியாகவும், பரிசோதனை மேற்கொள்ளவும் சென்றனர். முதலில் 8 நாட்கள் பரிசோதனைக்காக சென்ற அவர்கள், பின்னர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கினர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், 9 மாதங்களுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் உதவியுடன் இன்று காலை பூமிக்கு திரும்பியுள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பாதுகாப்புடனும், உடல் நலத்துடனும் உள்ளனர் என மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தெரிவிக்கப்பட்டது.
உலகளவில் விண்வெளியில் அதிக நாட்களை கழித்த வீரர்கள் பலர் உள்ளனர். அந்த பட்டியலில் முதல் இடத்தில் ரஷிய வீரர்கள் உள்ளனர். அவர்களை தொடர்ந்து அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இதில், விண்வெளியில் அதிக நாட்களை கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் வரிசையில் சுனிதா வில்லியம்ஸ் 2-வது இடம் பிடித்து உள்ளார். அமெரிக்க விஞ்ஞானியான பெக்கி விட்சன் (675 நாட்கள்) முதல் இடத்தில் கழித்துள்ளார்.
மார்ச் 28, 2025
மியான்மர் நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டாலே நகரருகே இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.

இதனால், கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்று சிறப்பு மிக்க துறவிகளுக்கான மடாலயம் கூட இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளை சந்தித்துள்ளன. மியான்மரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 3,700 பேர் பலியாகி உள்ளனர். 4,800 பேர் காயமடைந்தனர்.
இதேபோன்று, தாய்லாந்திலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 6 பேர் பலியானார்கள். 22 பேர் காயமடைந்தனர்.
மார்ச் 29, 2025
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் முதல் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பெய்ரூட் நகர் மீது முதன்முறையாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஏப்ரல் 2, 2025
அமெரிக்காவில் இருந்து உற்பத்தியாகி வரும் பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளையும் ரத்து செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 5, 2025
மியான்மர் நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டாலே நகரருகே கடந்த மார்ச் 28-ந்தேதி மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.
இதனால், கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் அவசரகால நிலையை உடனடியாக அரசு பிறப்பித்தது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த நிலநடுக்கத்திற்கு 30 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு போரால் மியான்மர் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில், தகவல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு இணையதள சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால், சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அந்நாட்டில், ஏற்பட்டு உள்ள உள்நாட்டு போரால் 30 லட்சம் பேர் புலம் பெயர்ந்து உள்ளனர். 2 கோடி பேர் உதவி தேவைப்படுவோராக உள்ளனர் என்றும் ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஏப்ரல் 12, 2025
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2-ந்தேதி, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது. இதனால், சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான மின்னணு கருவிகள், தரவுகள் சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்த பட்டியலில் உள்ளன.
ஏப்ரல் 13, 2025
காங்கோவில் பல ஆண்டுகளாக அரசுக்கும், ருவாண்டா நாட்டின் ஆதரவு பெற்ற எம்.23 என்ற கிளர்ச்சியாளர் அமைப்புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலானது, உலகளவில் மனித குலத்திற்கு மிக பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி மோசமடைய செய்த நிலையில், 70 லட்சம் பேர் தங்களை பாதுகாத்து கொள்ள புலம்பெயர்ந்து சென்றனர்.
இந்நிலையில், சமீபத்தில், கிழக்கு காங்கோவின் கோம பகுதிக்கு கிளர்ச்சியாளர்கள் முன்னேறினர். அதற்கு முன் கடந்த பிப்ரவரியில் புகாவு நகரையும் கைப்பற்றி இருந்தனர். கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில், அந்த பகுதியின் மிக பெரிய நகரான கோம பகுதியில் நடந்த மோதலில், 52 பேர் வரை கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 14, 2025
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் சென்று வந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரி, தொழிலதிபர் ஜெப் பெசோஸின் வருங்கால மனைவியான லாரன் சான்செஸ் உள்பட பெண்கள் மட்டுமே இடம் பெற்ற 6 பேர் கொண்ட குழு ஒன்று விண்வெளிக்கு செல்ல முடிவானது.
இதன்படி, புளூ ஆரிஜின் என்ற விண்கலத்தில் இன்று அவர்கள் விண்வெளிக்கு பயணித்தனர். மேற்கு டெக்சாஸில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஏறக்குறைய 11 நிமிடம் வரை அவர்களுடைய பயணம் நீடித்தது. கடந்த 1963-ம் ஆண்டுக்கு பின்னர், முதல் முறையாக பெண்கள் குழு மட்டுமே விண்வெளி நோக்கி மேற்கொண்ட பயணம் இதுவாகும்.
விண்வெளியின் எல்லை என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கர்மன் கோட்டை கடந்து பூமியில் இருந்து 100 கிலோ மீட்டருக்கும் கூடுதலான உயரத்திற்கு அந்த விண்கலம் சென்றது.
ஏப்ரல் 15, 2025
அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து காணப்படும் சூழலில், சமூக ஊடகத்தில் அது வேறு வகையான பரபரப்பை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளரான கரோலின் லீவிட் இந்த சர்ச்சைக்கு இலக்காகி உள்ளார். அவர் அணிந்துள்ள ஆடை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

அப்படியென்ன அதில் உள்ளது என்றால், சீன தூதர் ஜாங் ஜிஷெங், எக்ஸ் வலைதளத்தில் லீவிட் அணிந்துள்ள ஆடையின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதில் உள்ள கயிறு சீனாவில் தயாரான ஒன்று என பகிர்ந்து இருக்கிறார்.
அதற்கு ஒரு பயனாளர் சீனாவின் மாபு நகரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து அந்த கயிறு தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். ஜாங் வெளியிட்ட பதிவில், சீனாவை குற்றம் சொல்வது என்பது தொழில். சீனாவிடம் இருந்து பொருட்களை வாங்குவது என்பது வாழ்க்கை என குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பதிவு ஆன்லைனில் வெளியானதும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. சிலர் லீவிட்டை போலியான நடிப்பை வெளிப்படுத்துபவர் என்றும் சீனாவை சாடிக்கொண்டே சீன தயாரிப்பு ஆடையை அணிந்து கொள்கிறார் என்றும் குற்றச்சாட்டாக தெரிவித்தனர்.
எனினும், அவருக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு உள்ளனர். இது போலியான தகவல். லீவிட் பிரெஞ்சு தயாரிப்பை அணிந்து இருக்கிறார். ஆனால், விளம்பரத்தில் சீனாவின் நகல் காட்டப்படுகிறது என ஒருவர் தெரிவித்து உள்ளார்.
ஏப்ரல் 19, 2025
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து வடமேற்கே 330 கிலோ மீட்டர் தொலைவில் தினாஜ்பூர் மாவட்டத்தில் பாசுதேப்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பாபேஷ் சந்திரா ராய் (வயது 58). இந்து மதத்தின் பிரபல தலைவராக அறியப்பட்ட இவர், மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார்.
ஏப்ரல் 21, 2025
இந்தியாவின் 30 கோடி மக்களை தாக்க தயாராக உள்ள நிலநடுக்கம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
வட இந்தியாவில் இமயமலை பகுதியில் தவிர்க்க முடியாத வகையில், ரிக்டர் அளவுகோலில் 8 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி அமெரிக்க புவிஇயற்பியலாளரான ரோஜர் பில்ஹாம் கூறும்போது, ஒவ்வொரு நூற்றாண்டிலும் திபெத்தின் தென்முனைக்கு அடியில் 2 மீட்டர் அளவுக்கு இந்தியா சரிந்து வருகிறது. சில நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை இமயமலையில் இந்த அளவிலான சரிவால் ரிக்டரில் 8 அளவிலான நிலநடுக்கங்கள் இமயமலையை தாக்குகின்றன.
ஆனால், கடந்த 70 ஆண்டுகளில், இமயமலையை கடுமையாக தாக்கும் அளவிலான அழுத்தம் வெளியிடப்படாமல் உள்ளது. அது நிச்சயம் நிகழும். சாத்தியத்திற்கான கேள்வியே இல்லை என அவர் கூறுகிறார்.
அதற்கான சாத்தியம் பற்றி கேள்வி எழுப்புவதற்கு பதில், எப்போது அது நடக்கும் என்ற கேள்வியே முக்கியம் என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக எச்சரிக்கை தெரிவித்தபடியே இருக்கின்றனர்.
இந்த சூழலில், இமயமலையில் ஏற்பட கூடிய நிலநடுக்கம், பெருங்கடலில் ஏற்படாமல் நேரிடையாக நிலத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் என பில்ஹாம் எச்சரித்து உள்ளார்.
வருங்காலத்தில் பெரிய அளவில் இமயமலை நிலநடுக்கம் (ரிக்டர் அளவில் 8.2 முதல் 8.9 வரை) ஏற்படும் சாத்தியம் உள்ளது. உலகில் நிலப்பகுதியில் இந்த அளவுக்கு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இமயமலை உள்ளது. கடுமையாக பூமி குலுங்கும்போது, 30 கோடி மக்களை அது பாதிக்கும் என எச்சரிக்கிறார்.
மே 2, 2025
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.
இதனால், அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியுள்ளது.
இதன்படி, பாகிஸ்தானில் பதிவு செய்த அனைத்து விமானங்கள், பாகிஸ்தானிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள், ராணுவ விமானங்கள் உள்பட குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களும் இந்திய வான்வெளியில் பறந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைமுறையானது, ஏப்ரல் 30-ந்தேதி முதல் மே 23-ந்தேதி வரை அமலில் இருக்கும் என இந்தியா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்றதொரு நடவடிக்கையை கடந்த 6 நாட்களுக்கு முன்பே பாகிஸ்தான் எடுத்திருந்தது.
மே 3, 2025
காசா பகுதியில், ஓராண்டை கடந்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், காசாவில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிக்கான பொருட்களை வழங்குவதற்காக 16 பேருடன் கப்பல் ஒன்று சென்றுள்ளது. அதனை மனித உரிமைகள் குழுவினர் இயக்கினர்.
இந்நிலையில், மால்டா கடற்கரை பகுதியில் நேற்று அந்த கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் கப்பலில் தீ பிடித்து கொண்டது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கப்பல் நீரில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
உடனே கப்பலில் இருந்தவர்கள் சார்பில் அவசரகால அபாய அழைப்பு விடப்பட்டது. இதனை தொடர்ந்து, மற்றொரு கப்பல் விரைவாக வந்து, தீப்பிடித்த கப்பலில் இருந்தவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கப்பலின் தீயும் அணைக்கப்பட்டது. 16 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதனை மால்டா அரசு தெரிவித்து உள்ளது.
மே 8, 2025
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் 26-ந்தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நடைமுறைகளுக்குப்பின் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதற்காக, சிஸ்டைன் ஆலயத்தில் 80 வயதுக்கு உட்பட்ட 133 கார்டினல்கள் கூடி தங்களுக்கு உள்ளேயிருந்து ஒருவரை அடுத்த போப் ஆண்டவராக தேர்வு செய்வார்கள். அதில் 3-ல் 2 பங்கு ஆதரவு பெறும் (89 வாக்குகள்) கார்டினல் புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுவார்.
இந்நிலையில், புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என குறிக்கும் வகையில், சிம்னியில் இருந்து இன்றிரவு வெள்ளை புகை வெளியேறியுள்ளது. இதனால், வெற்றி பெற்றவர் 89 ஓட்டுகளை பெற்றிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் ஆரவாரத்தில் கூச்சலிட்டனர்.
மே 18, 2025
வங்காளதேச நாட்டை சேர்ந்த பிரபல நடிகை நுஸ்ராத் பரியா (வயது 31). 2023-ம் ஆண்டு, பிரபல மறைந்த இயக்குநர் ஷியாம் பெனிகல் இயக்கத்தில் வெளிவந்த முஜிப்: தி மேகிங் ஆப் எ நேசன் என்ற, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து ரசிகர்கள் மற்றும் அந்நாட்டு மக்களிடையே புகழ் பெற்றார்.

கடந்த ஆண்டு ஜூலையில் ஹசீனாவுக்கு எதிராக உள்நாட்டில் கலவரம் வெடித்து பரவியது. இதில் கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக பரியாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டுக்கு செல்வதற்காக டாக்காவில் உள்ள ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்துள்ளார். அப்போது அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில், ஹசீனா பதவி விலகியதுடன், இந்தியாவுக்கு வந்து தஞ்சம் புகுந்துள்ளார்.
மே 27, 2025
ஈரானின் தெற்கே ஷிராஜ் நகரில் இன்று காலை நீதிபதி ஈசம் பாகேரி (வயது 38) என்பவர் வேலைக்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நகர நீதி துறையில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாத 2 பேர் அவரை கத்தியால் குத்தி விட்டு, தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்து விட்டார். இந்த தாக்குதலுக்கு உடனடியாக ஒருவரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் இல்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஈரான் நாட்டில் கடந்த காலங்களில் நீதிபதிகள் படுகொலை செய்யப்படுவது என்பது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜனவரியில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் முக்கிய நீதிபதிகள் 2 பேரை, நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். அவர்கள் 1980-ம் ஆண்டு பெரிய அளவில் நடந்த எதிர்ப்பாளர்களின் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது.
மே 29, 2025
அமெரிக்காவுக்கு, கனடா நாட்டின் வழியே இந்தியர்களை கொண்டு செல்லும்போது, 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், புளோரிடாவை சேர்ந்த ஹர்ஷ்குமார் ராமன்லால் பட்டேல் (வயது 29) மற்றும் ஸ்டீவ் அந்தோணி ஷாண்ட் (வயது 50) ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மின்னசோட்டா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அவர்களில், பட்டேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அந்தோணிக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அந்தோணிக்கு 2 வருட கண்காணிப்பின் கீழ் சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
இருவரும், அவர்களுடைய சொந்த பலன்களுக்காக, ஆயிரக்கணக்கானோரின் வாழ்வை ஆபத்தில் சிக்க வைத்துள்ளனர். இதில், 2 சிறிய குழந்தைகள் பனியில் உறைந்து மரணம் அடைந்து உள்ளனர். அதனை அவர்கள் கவனித்தும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர் என நீதிபதி மாத்யூ கேலியோட்டி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
மே 31, 2025
நைஜீரியா நாட்டின் தலைநகர் அபுஜா நகரில் இருந்து மேற்கே 380 கி.மீ. தொலைவில் மொக்வா என்ற நகரம் உள்ளது. கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் கனமழை பெய்ததில், நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
இதில் சிக்கி 151 பேர் உயிரிழந்து உள்ளனர். 11 பேர் காயமடைந்து உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். தொடர் மழையால், பொதுமக்களின் இடுப்பு வரை வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. ஏறக்குறைய 5 மணிநேரத்தில், வெள்ளம் அதிகரித்து 500-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின.
ஜூன் 4, 2025
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோடினர். பாகிஸ்தானில் கைதிகள் தப்பியோடியதன் தொடர்ச்சியாக சிறை துறையின் உயரதிகாரிகள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஜூன் 5, 2025
ஜெர்மனியில் 2-ம் உலக போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. போர் முடிந்து 80 ஆண்டுகள் ஆன பின்னரும், வெடிக்காத குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
ஜூன் 8, 2025
கானா நாட்டில் 2022-ம் ஆண்டு குரங்கம்மை பாதிப்பு பரவல் தொடங்கியிருந்தது. அதன்பின்னர் தீவிர நடவடிக்கையால் அதன் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதத்தில் 45 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு சுகாதார சேவை அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
இதனால், இந்த முறை நிலைமை மோசமடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அளவுக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதுபற்றிய அறிக்கை தெரிவித்தது.
ஜூன் 24, 2025
இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. எனினும், ஈரான் விதிமீறலில் ஈடுபட்டால் இஸ்ரேல் தீவிர பதிலடி தரும் என நெதன்யாகு எச்சரித்தும் உள்ளார்.
ஜூன் 25, 2025
கத்தார் நாட்டு விமான படை தளம் மீது தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் தூதரை அழைத்து கத்தார் கடும் கண்டனம் தெரிவித்தது. ஈரானின் தாக்குதல் ஆனது கத்தாரின் இறையாண்மை மற்றும் வான்வெளியை வெளிப்படையாக மீறியுள்ளது என கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரானின் 3 முக்கிய அணு உலைகளை இலக்காக கொண்டு அமெரிக்கா தாக்கியது. எனினும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்பே எடுத்து விட்டோம் என ஈரான் பதிலளித்தது.
ஆனால், அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் எச்சரித்தது. தொடர்ந்து பதில் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் படைகள் நிறுத்தப்பட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கியது. இதில் கத்தார் நாடும் தாக்கப்பட்டது.
ஜூன் 25, 2025
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று புறப்பட்டது. அது நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைகிறது.

கடந்த 22-ந்தேதி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என நாசா தெரிவித்தது. இந்த சூழலில், இன்று வானிலை 90 சதவீதம் சாதக நிலையில் உள்ளது என தெரிய வந்துள்ளது. இதனால், விண்வெளி பயணம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூலை 1, 2025
அமெரிக்காவில் இஸ்கான் கோவில் மீது தொடர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபற்றிய அறிக்கை ஒன்றை அந்த கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதுபற்றிய புகைப்படங்களையும் இணையதளத்தில் பகிர்ந்து தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த தாக்குதல் நடந்து வருகிறது. பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் கோவிலின் உள்ளே இருக்கும்போது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது என தெரிவித்தது. இதற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்தது.
ஜூலை 17, 2025
வங்காளதேசத்தில் தேசிய குடிமக்கள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள், போலீசார் இடையே நடந்த மோதலில் 4 பேர் பலியானார்கள்.
ஜூலை 20, 2025
சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத். தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் இவர் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், நேற்று மரணம் அடைந்து உள்ளார். அவருக்கு வயது 36.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ராணுவ பயிற்சிக்காக படித்து வந்த அவர், 2005-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கினார். இதில், காயமடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், 20 ஆண்டுகளாக கோமாவிலேயே இருந்த இளவரசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
அவருடைய மறைவை, அல் வாலீத்தின் தந்தையான இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் உறுதி செய்துள்ளார். அவருடைய இறுதி சடங்குகள் இன்று நடைபெறும்.
ஜூலை 26, 2025
தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகளின் இடையேயும் பதற்றம் தொற்றியது.
இந்நிலையில், இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் எல்லை பகுதியில் கடந்த வியாழக்கிழமை மோதி கொண்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. கம்போடிய ராணுவம் நீண்டதூர ராக்கெட்டுகளை கொண்டு பொதுமக்கள் மீது தாக்கியது என தாய்லாந்து குற்றச்சாட்டாக தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் குடிமக்களில் 9 பேர் பலியானார்கள் என முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில் இரு தரப்பிலும் சேர்த்து, பலி எண்ணிக்கை மொத்தம் 32 ஆக உயர்ந்து உள்ளது.
ஜூலை 27, 2025
துருக்கியில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. துருக்கியில், இதுவரை இல்லாத வகையில் 122.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது என அந்நாட்டு வானிலை இயக்குநரகம் தெரிவித்து உள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயை அணைப்பு வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். காட்டுத்தீக்கு இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தீயில் கருகி விட்டன. 1,700 பேர் பாதுகாப்பான இடம் தேடி புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
ஜூலை 28, 2025
போர் நிறுத்தத்திற்கு கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் நிபந்தனையின்றி ஒப்புதல் அளித்தன. இதன்படி, கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையேயான போர்நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தகவல் தெரிவித்தது.
ஜூலை 29, 2025
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனியர்கள் 60 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பாதி பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.
ஜூலை 30, 2025
ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து, ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இதுபற்றி அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட செய்தியில், 19.3 கி.மீ. ஆழத்தில், 1.65 லட்சம் பேர் வசிக்க கூடிய அவச்சா என்ற கடலோர நகரத்தில், கம்சாத்ஸ்கை நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 125 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
எனினும், பின்னர் அது 8.0 என திருத்தி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகின. இதனால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர சுனாமி அலைகள் எழும்ப கூடும் என அமெரிக்காவும் எச்சரித்து உள்ளது. இதனால், பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்ப கூடும்.
தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானில் ஓரடிக்கு மேல் உயரத்தில் அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
ஜூலை 30, 2025
பூமியின் மீது வருகிற நவம்பரில் மர்ம விண்வெளி பொருள் ஒன்று தாக்கம் ஏற்படுத்த போகிறது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர். பூமியை நோக்கி மேன்ஹேட்டன் நகரம் அளவிலான அந்த மர்ம பொருள் ஏவப்பட்டு உள்ளது என அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

அது, நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்து நிறைந்த ஒன்றாக இருக்கும். அந்த பொருளுக்கு விஞ்ஞானிகள் 3I/அட்லஸ் (இதற்கு முன்பு A11pl3Z என அறியப்பட்டு இருந்தது) என ஆய்வாளர்கள் பெயரிட்டு உள்ளனர். இந்த மர்ம பொருள், ஏலியன்களின் தொழில் நுட்பம் உதவியுடன், பூமி மீது திடீர் தாக்குதல் நடத்த கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
பூமி, சூரியனை விடவும் இது மிக வயது முதிர்ந்தது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது மணிக்கு 2.45 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடும் என தெரிகிறது. அதனால், சூரிய மண்டலத்திலேயே மிக விரைவாக செல்ல கூடிய பொருளாக இது பார்க்கப்படுகிறது.
ஆகஸ்டு 10, 2025
தாய்லாந்து நாட்டில் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியதில் 9 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் ஒருவர் சிறுமி. 7 பேர் பெண்கள் ஆவர்.
ஆகஸ்டு 17, 2025
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவில் 605 அடி உயர கோபுரத்தில் இந்திய தேசிய கொடி பறந்தது.

ஆகஸ்டு 17, 2025
அல்ஜீரியாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 18 பயணிகள் பலியானார்கள். அல்ஜீரியாவின் ஜனாதிபதி தெபவுன் விபத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன் நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்து உள்ளார்.
ஆகஸ்டு 23, 2025
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் சிக்கி 5 பேர் பலியானார்கள். இந்தியர்கள் உள்பட 40 பேர் காயம் அடைந்தனர்.
செப்டம்பர் 7, 2025
நைஜீரியாவில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 60 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
செப்டம்பர் 23, 2025
பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரத்திற்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்தது. ஐ.நா. அமைப்பு பாலஸ்தீன தனி நாடுக்கான முன்மொழிவை கொண்டு வந்தபோது, கனடா முதலில், இதற்கான ஆதரவை அறிவித்தது.
செப்டம்பர் 25, 2025
ரகசா புயல் தாக்கியதில் தைவான், பிலிப்பைன்சில் 27 பேர் பலியானார்கள். ஹாங்காங்கில் 100 பேர் காயம் அடைந்தனர். ஹாங்காங்கில் 36 மணிநேர இடைவெளிக்கு பின்னர், சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை இன்று வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.

செப்டம்பர் 29, 2025
வியட்நாமில் புவலாய் புயல் தாக்கியதில் 11 பேர் பலியானார்கள்.
அக்டோபர் 2, 2025
பாகிஸ்தானில் தொடர் மழை, வெள்ளம் எதிரொலியாக பலி எண்ணிக்கை 1006 ஆக உயர்வடைந்து உள்ளது. பாகிஸ்தானில் ஒட்டு மொத்தத்தில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் உயிரிழந்து உள்ளனர்.

அக்டோபர் 16, 2025
மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவலால் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணப்பட்ட எக்ஸ்.எப்.ஜி. என்ற புதிய கொரோனா வகை தொற்று அந்நாட்டில் அதிகளவில் பரவி வருகிறது. நாடு முழுவதும் வருகிற நவம்பரில் ஏறக்குறைய 4 லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வு எழுத உள்ள சூழலில் இந்த திடீர் தொற்று அதிகரித்து காணப்படுகிறது.

அக்டோபர் 16, 2025
பிரஸ்ஸல்ஸ் நாட்டில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட அளவிலான கூட்டம் நடந்தது. இதில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. அமெரிக்கா சார்பில் அதன் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவர் நேட்டோ நட்பு நாடுகளின் மந்திரிகளின் முன்னிலையில் பேசும்போது, உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டார்.
ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்தால், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஒன்றாக சேர்ந்து, ரஷியாவுக்கு எதிராக தடைகளை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து பேசினார். இதேபோன்று அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை ஐரோப்பிய நாடுகள் கொள்முதல் செய்யவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நேட்டோ பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்று விட்டு அவர் நாடு திரும்பினார். அப்போது, அவர் பயணித்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் முக்கிய பகுதியான முன்பக்க ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, விமானம் உடனடியாக இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
ரஷியாவை எச்சரித்த சில மணிநேரத்தில் அமெரிக்க பாதுகாப்பு மந்திரியின் விமானம் இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது பரபரப்பாக பார்க்கப்பட்டது.
அக்டோபர் 16, 2025
மெக்சிகோவில் புயலுக்கு 1 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 130 பேர் பலியாகி உள்ளனர். மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், இந்த அளவுக்கு தீவிர மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என கூறினார்.
அக்டோபர் 29, 2025
காசாவில் இஸ்ரேல் நடத்திய கடுமையான தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். காசா மருத்துவமனைகளில் போதிய மருந்து பொருட்கள் இருப்பு இல்லாத நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
அக்டோபர் 29, 2025
சூடானில் அரசுக்கும் மற்றும் துணை ராணுவத்திற்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், சூடானில் மருத்துவமனையில் தாக்குதலில் 460 பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
அக்டோபர் 30, 2025
பாகிஸ்தானில் நடந்த ராணுவ வாகனம் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் கேப்டன் உள்பட 6 வீரர்கள் பலியாகி உள்ளனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 30, 2025
பிரேசில் நாட்டில் ஜனாதிபதி லூயிஸ் இனேசியோ லூலா டா சில்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அவருடைய அரசு போதை பொருள் கும்பலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து அந்நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போதை பொருள் கும்பலுக்கு எதிராக ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலம் போல் காட்சியளித்தது.
இதில், போதை பொருள் கும்பலை சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் 60 பேர் மற்றும் 4 போலீசார் உள்பட 64 பேர் பலியானார்கள் என முதல் கட்ட தகவல் தெரிவித்தது. ரியோ நகர வரலாற்றில் மிக பெரிய நடவடிக்கையிது என இதுபற்றி ரியோ நகர கவர்னர் கிளாடியோ கேஸ்டிரோ குறிப்பிட்டார். இந்நிலையில், பிரேசிலில் போதை பொருள் கும்பலுக்கு எதிரான வேட்டையில் 132 பேர் பலியாகி உள்ளனர்.
நவம்பர் 2, 2025
மெக்சிகோ நாட்டில் வடமேற்கே அமைந்த சொனோரா மாகாணத்தில் ஹெர்மோசில்லோ நகரில் உள்ள கடை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதில் பலர் சிக்கி கொண்டனர். கரும் புகை சூழ்ந்து அவர்களால் தப்பி வெளியே வர முடியவில்லை.
இந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
நவம்பர் 6, 2025
பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளியில் சிக்கி 140 பேர் பலியாகி உள்ளனர். இது தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு உள்ளது. புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 லட்சம் பிலிப்பைனைஸ் மக்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டனர்.

நவம்பர் 17, 2025
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொள்வோர் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சில் 43 பேர் பயணித்தனர். அப்போது அந்த் பஸ் இன்று அதிகாலை 1.30 மணியளவில் முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில், பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பலத்த காயமடைந்து உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் ஒரே ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
அவர்கள் அனைவரும் மெக்காவுக்கு சென்று உம்ரா சடங்குகளை முடித்து விட்டு, மெதீனாவுக்கு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
நவம்பர் 27, 2025
ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து உள்ளது. 300 பேரை காணவில்லை. இந்த சம்பவத்தில், 2 இயக்குநர்கள் மற்றும் பொறியியல் ஆலோசகர் என 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
நவம்பர் 29, 2025
தாய்லாந்தில் கனமழையால் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 145 பேர் பலியாகி உள்ளனர். கனமழை எதிரொலியாக தாய்லாந்தின் சாங்கிலா மாகாணத்தில் மட்டுமே 110 பேர் பலியாகி உள்ளனர்.
நவம்பர் 29, 2025
இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு தொடர்ச்சியாக பலி எண்ணிக்கை 248 ஆக உயர்ந்து உள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நவம்பர் 30, 2025
இலங்கையில் இதுவரை இல்லாத வகையில், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், டிட்வா புயலால், வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
கனமழையால், நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக, பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 153 பேர் பலியாகி உள்ளனர். 200 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது. நாட்டின் 3-ல் ஒரு பங்கு மக்கள் மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் இன்றி தவித்தனர்.

டிசம்பர் 2, 2025
இந்தோனேசியாவில் புயல், வெள்ள பாதிப்புக்கு 604 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காணாமல் போயுள்ளனர். 3 நாட்களாக பலர் சாப்பிட உணவு கிடைக்காமலும், தூய குடிநீர், இணையதள, மின் இணைப்பு வசதியின்றியும் அவதியடைந்து வருகின்றனர்.
டிசம்பர் 2, 2025
22 ஆண்டுகளில் இல்லாத வகையில் சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
டிசம்பர் 2, 2025
இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது.
இலங்கையில் கனமழையில் சிக்கி 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது.
புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று சீனா, பாகிஸ்தானும் உதவி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் நிவாரண பொருட்களை விமானத்தில் அனுப்பி வைத்தது. மருந்து பொருட்கள், உணவு பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பியது. அதனை வாங்கி பார்த்த இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், 2024-ம் ஆண்டு காலாவதியான தேதியை கொண்ட பல பொட்டலங்களும் இருந்துள்ளன. அவசரகால தேவைக்காக அனுப்பிய பல பொருட்கள் பயன்படுத்த முடியாதவையாகவும், காலாவதியாகவும் இருந்துள்ளன.
இதனை, இலங்கையின் பேரிடர் நிர்வாகம் மற்றும் வெளிவிவகார துறையினர் தீவிர கவனத்தில் கொண்டனர். பாகிஸ்தானிடம் தூதரக அளவிலும், வேறு வழிகளிலும் தன்னுடைய அதிருப்தியை இலங்கை தெரியப்படுத்தி உள்ளது.

டிசம்பர் 10, 2025
சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டத்தின் சாந்தவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், தீ மளமளவென பரவியது. 150 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளுக்கு தீ பரவியது. இதில் சிக்கி 12 பேர் பலியானார்கள்.
40 நிமிடங்களுக்கு பின்னர் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
டிசம்பர் 16, 2025
மொராக்கோ நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், வெள்ளம் போன்ற பருவநிலை மாற்ற தாக்கங்களாலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
அந்நாட்டின் தலைநகர் ரபத் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் எதிரொலியாக, நகரின் பல பகுதிகளிலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. கார்கள் சாரை சாரையாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளும் காணப்படுகின்றன.
இந்த வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலியாகி உள்ளனர்.

டிசம்பர் 17, 2025
ரஷியாவில் பள்ளியில் சக மாணவன் கத்தியால் குத்தியதில் 10 வயது மாணவன் பலியானான். இதன்பின்னர் மாணவனின் உடலுடன் செல்பி எடுத்த கொடூர சம்பவமும் நடந்துள்ளது.
டிசம்பர் 20, 2025
வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பத்திரிகையாளர் பலியானதுடன், இந்து வாலிபரை கொன்று, கம்பத்தில் தொங்க விட்டு, உடலை எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில், இம்தாதுல் ஹக் மிலோன் என்ற பத்திரிகையாளர், குல்னா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.











