ஏமன்: 13 இடங்களில் அமெரிக்கா தாக்குதல்; 3 பேர் பலி

ஏமனின் ஹொடைடா துறைமுகம் மற்றும் விமான நிலையம் என 13 இடங்களில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
சனா,
ஓராண்டுக்கு மேலாக காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 1.16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹவுதி பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. செங்கடலில் செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்களை மறித்து, தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஹவுதி பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா, அவர்களின் ஆதிக்கம் நிறைந்த ஏமன் நாட்டின் பகுதிகளின் மீது கடுமையாக தாக்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஏமனில் உள்ள ராஸ் இசா துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் காயமடைந்தனர்.
இந்த சூழலில், அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஏமனின் ஹொடைடா துறைமுகம் மற்றும் விமான நிலையம் என 13 இடங்களில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
ஏமன் தலைநகர் சனாவின் அல்-தாவ்ரா, பனி மதர் மற்றும் அல்-சபியா மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
செங்கடலில் கப்பல்களை மறித்து, தாக்கும் ஹவுதிகளை தடுத்து நிறுத்தும் இலக்கை அடைவதற்காக அதிக அளவில் படைகளை பயன்படுத்துவோம் என டிரம்ப் தெரிவித்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதல் தீவிரமடைந்து உள்ளது. எனினும், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் வரை பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக நாங்களும் தாக்குதல் நடத்துவோம். ஆயுதங்களை கீழே போடமாட்டோம் என ஹவுதி தெரிவித்து உள்ளது.






