அ.தி.மு.க.விற்கு மக்கள் எழுச்சி பெரிய அளவில் உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேச்சு


அ.தி.மு.க.விற்கு மக்கள் எழுச்சி பெரிய அளவில் உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

நான் அ.தி.மு.க.வின் தலைவன் அல்ல; ஒரு தொண்டன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை,

மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காய்கறி சந்தை மற்றும் பழ அங்காடியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா உடனிருந்தனர்.

அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல்; எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தலில் போட்டியிடுவது இல்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வை கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி கொண்டிருக்கிறார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. மிக்ஜம் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். நான் என்ன பொய் சொல்கிறேன் என்று அவர்கள் கூறட்டும், விளக்கம் அளிக்கிறேன். 520 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அ.தி.மு.க.விற்கு மக்கள் எழுச்சி பெரிய அளவில் உள்ளது. நான் அ.தி.மு.க.வின் தலைவன் அல்ல; ஒரு தொண்டன். அ.தி.மு.க.வில் 100 சதவீதம் வாரிசு அரசியல் இல்லை. எனக்கு பின்னால் யாரோ ஒரு தொண்டன் தான் தலைமை பொறுப்புக்கு வருவார். தமிழகத்தில் 35 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க.வில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும், தி.மு.க.வில் வர முடியுமா?.

திராவிட கட்சிகளால் எந்த பயனும் இல்லையென்றால், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏன் எங்களுடன் கூட்டணி வைத்தார்?. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நிலைப்பாடு, நிலையான கொள்கை இல்லாத கட்சி பா.ம.க.

ஜெயலலிதா குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புகழ்ந்து பேசியது மகிழ்ச்சிதான். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட அ.தி.மு.க. தலைவர்களை புகழ்வது மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story