பணத்தை கொடுத்து ஓட்டுகளை வாங்குகிறார்கள் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டடோர் மற்றும் பழங்குடியினர் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு தற்போது 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அரம்பாக்கில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில், முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
பா.ஜனதாவினர் மக்களிடம் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகிறார்கள். பயங்கரவாத ஆட்சி வருவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், பா.ஜனதாவுக்கு வாக்களிக்கக் கூடாது.
டெல்லியில் அதிகார சமன்பாட்டை மாற்றுவதற்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. மேற்குவங்காள மக்களை அவதூறாக பேசுவதை பா.ஜனதா வழக்கமாக கொண்டுள்ளது. போலியான பாலியல் புகார்களை தெரிவித்து, சந்தோஷ்காளி பெண்களை அவமரியாதை செய்தது பா.ஜனதா.
மேற்குவங்கத்தில் 26 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைகளை பறித்தது அந்த கட்சி. ஆனால் நாங்கள் ஆசிரியர்களுக்கு துணை நின்றோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு காரணமாக தற்போதைக்கு வேலைகள் காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்காக நான் போராடினேன். பிரதமர் மோடி காலை முதல் இரவு வரை பொய்களையே பேசுகிறார்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டடோர் மற்றும் பழங்குடியினர் நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்த முறை மோடி வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் தேர்தல் நடக்காது. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.