கூட்டணி அரசுகள் நாட்டின் நலன்களுக்கு வீழ்ச்சி ஏற்படுத்துபவை: பிரதமர் மோடி பிரசாரம்


கூட்டணி அரசுகள் நாட்டின் நலன்களுக்கு வீழ்ச்சி ஏற்படுத்துபவை:  பிரதமர் மோடி பிரசாரம்
x

கூட்டணிக்கான கட்டாயம் மற்றும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களால், நாட்டின் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது என பிரதமர் மோடி கூறினார்.

அஜ்மீர்,

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் நடந்த பொதுப்பேரணியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், பா.ஜ.க. ஆட்சியின் கீழ் வளர்ச்சிக்கான சிறந்த உச்சம் நோக்கி ராஜஸ்தான் முன்னேறி கொண்டிருக்கிறது என்றார். காங்கிரஸ் உள்ள இடத்தில் எல்லாம், வளர்ச்சி என்பது ஒருபோதும் ஏற்படாது. ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், வறுமை நிலையில் உள்ளவர்கள், இளைஞர்களை பற்றி காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை. காங்கிரஸ் கட்சி, குடும்ப கட்சியாக இருப்பதுடன், சமஅளவில் ஊழல் நிறைந்த கட்சியாகும்.

காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் வாழ்வதற்கு கஷ்டப்பட்டனர். ஊழலோ அல்லது பயங்கரவாத தாக்குதல்களோ தினமும் அதுபற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், 2014-ம் ஆண்டில் இருந்து நாட்டில் ஒரு பெரிய மாற்றம் தொடங்கியது என பேசியுள்ளார்.

நம்முடைய நாட்டில் எத்தனை தசாப்தங்களாக கூட்டணி அரசு நடந்து வந்தது என நீங்கள் இன்று நினைவுகூர்ந்து பாருங்கள். கூட்டணிக்கான கட்டாயம் மற்றும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்கள்... இதில், நாட்டின் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது என கூறிய அவர், கூட்டணி அரசாங்கங்கள் நாட்டின் நலன்களுக்கு வீழ்ச்சி ஏற்படுத்துபவை என்று அழுத்தி கூறினார்.

ராஜஸ்தானில் ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் 12 மக்களவை தொகுதிகளுக்கும், 2-ம் கட்ட தேர்தலில் 13 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெறும்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.க. மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 24 தொகுதிகளை கைப்பற்றியது. ராஷ்டீரிய லோகதந்த்ரீக கட்சி ஒரு தொகுதியை கைப்பற்றி இருந்தது.


Next Story