'இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையே மோதல் : 6 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் அறிவிப்பு


இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே மோதல் : 6 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் அறிவிப்பு
x

கோப்புப்படம்

மராட்டியத்தில் உத்தவ் சிவசேனா வேட்பாளர்களை நிறுத்திய 6 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் 'இந்தியா' கூட்டணியில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி சமீபத்தில் சாங்கிலி, தென் மத்திய மும்பை, வடமேற்கு மும்பை உள்பட 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 22 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

இது உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் தன்னிச்சையான அறிவிப்பு எனக்கூறி காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நசீம் கான், ஒருதலைப்பட்சமாக வேட்பாளரை அறிவித்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தன்னிச்சையான அறிவிப்பு சரியானது இல்லை. மாநிலத்தில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளில் நட்பு ரீதியாக போட்டியிடுவதில் காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது. நாங்கள் சாங்கிலி, தென் மத்திய மும்பை, மற்றும் வடமேற்கு மும்பை உள்ளிட்ட 6 தொகுதிகளில் நட்பு ரீதியாக போட்டியிட உள்ளோம். இதுகுறித்து மத்திய தலைமைக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.

காங்கிரஸ் உரிமை கோரும் தொகுதிகளில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா வேட்பாளர்களை அறிவித்த விதம் எங்கள் கட்சியை கோபப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இவரின் பேச்சு 'இந்தியா' கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலளித்து பேசிய உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், "நமது கூட்டணி கட்சிகளின் இதுபோன்ற சண்டைகள் ஆளும் பா.ஜனதா கட்சிக்குத்தான் உதவும். காங்கிரஸ் ஒரு முதிர்ந்த கட்சியாகும், அது பா.ஜனதாவுக்கு உதவக்கூடிய நட்பு ரீதியான போட்டியை அனுமதிக்காது என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும், " இதுபோன்ற நட்பு ரீதியான போட்டியை மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளிலும், பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் கூட நடத்த வேண்டும்" என்று சஞ்சய் ராவத் கிண்டல் செய்தார்.


Next Story