'வறுமையும், பிரச்சினைகளும் நிறைந்த இந்தியாவைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது' - பிரதமர் மோடி


வறுமையும், பிரச்சினைகளும் நிறைந்த இந்தியாவைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 24 May 2024 9:30 PM IST (Updated: 24 May 2024 9:38 PM IST)
t-max-icont-min-icon

வறுமையும், பிரச்சினைகளும் நிறைந்த இந்தியாவைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

சிம்லா,

மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத்தை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சியை மக்கள் பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறார்கள். வறுமையும், நெருக்கடியும், பிரச்சினைகளும் நிறைந்த இந்தியாவைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது. நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியில் 'ரிவர்ஸ் கியர்' போட அவர்கள் விரும்புகிறார்கள்.

இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்றும், சி.ஏ.ஏ.வை ரத்து செய்வோம் என்று கூறி வருகிறது. நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை ஒழித்து விடுவோம் என்றும் காங்கிரஸ் கட்சி கூறுகிறது.

இந்தியாவில் உள்ள இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் அல்லது புத்த மதம் உள்ளிட்ட எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் பொது சிவில் சட்டம் என்பது தேவையானது. ஆனால் காங்கிரஸ் கட்சி பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறது.

இன்று அயோத்தியில் குழந்தை ராமர் வீற்றிருக்கிறார். இமாச்சல பிரதேசம் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடவுள்கள் ஆசீர்வாதங்களை வழங்குகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியாக இல்லை. நீங்கள் உங்கள் வாக்கை செலுத்தி மோடிக்கு அதிகாரம் அளித்திருக்காவிட்டால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது சாத்தியமாகி இருக்காது.

காங்கிரஸ் கட்சி இன்னும் 21-ம் நூற்றாண்டிற்கே வரவில்லை. மக்கள் முன்னோக்கி செல்கிறார்கள், ஆனால் காங்கிரஸ் கட்சி 20-ம் நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story