முன்மொழிந்தவர்கள் கையெழுத்திடவில்லை என வாதம்: காங். வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு


முன்மொழிந்தவர்கள் கையெழுத்திடவில்லை என வாதம்: காங். வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு
x

முன்மொழிந்தவர்கள் கையெழுத்திடவில்லை என கூறியதால் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

காந்திநகர்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தலும் வரும் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வரும் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி 19ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதில், குஜராத்தின் சுரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலீஷ் கும்பானி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின்போது 3 பேர் முன்மொழிந்துள்ளனர். நிலீஷ் கும்பானியின் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவுக்கும் இதே 3 பேர் தான் வேட்புமனுவில் முன்மொழித்தனர்.

ஆனால், நிலீஷ் கும்பானி மற்றும் சுரேஷ் பட்சாலாவின் வேட்புமனு தாக்கலின்போது முன்மொழித்த 3 பேரும் தாங்கள் வேட்புமனு தாக்கல் மனுவில் கையெழுத்திடவில்லை என கூறினர். வேட்புமனுவில் தங்கள் கையெழுத்திற்கு பதில் போலியாக கையெழுத்து போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் எழுதினர். இதையடுத்து நிலீஷ் கும்பானி மற்றும் சுரேஷ் பட்சாலாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது.

இந்நிலையில், சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நிலீஷ் கும்பானி மற்றும் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவின் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். இதன் மூலம் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க., ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்ற்கொள்ளப்பட்டுள்ளன. வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிலீஷ் கும்பானி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story