இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்


இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்
x
தினத்தந்தி 15 March 2024 6:52 PM GMT (Updated: 16 March 2024 8:31 AM GMT)

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அதேவேளை, திடீர் திருப்பமாக சமத்துவ மக்கள் கட்சியை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளார். அதேபோல், நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற கட்சியை நடத்தி வந்தார். அவர் அக்கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்தார்.

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு நிர்வாகிகளுடன் மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஒரு தொகுதி ஒதுக்கும்பட்சத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்போம் என மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று வளசரவாக்கத்தில் நடைபெற்றது.

செயற்குழு முடிவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு அளிக்கப்படுவதாகவும், பொதுச்செயலாளர் தலைமையில் இத்தேர்தலில் பரப்புரையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பரப்புரை குழுவானது கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுவதாக செயற்குழு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story