"எனக்கு 2 அப்பாக்கள்" நெல்லை முபாராக் பேச்சை கேட்டு விம்மி அழுத திண்டுக்கல் சீனிவாசன்


எனக்கு 2 அப்பாக்கள் நெல்லை முபாராக் பேச்சை கேட்டு விம்மி அழுத திண்டுக்கல் சீனிவாசன்
x
தினத்தந்தி 26 March 2024 4:09 PM GMT (Updated: 26 March 2024 4:09 PM GMT)

திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

திண்டுக்கல்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சியினரின் அறிமுகக் கூட்டம் நடந்தது. அந்த மேடையில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

அங்கு பேசிய முபாரக், "என்னுடைய அப்பா 2015- ல் தவறிப்போய்விட்டார். என்னுடைய தாயார் 2022- ல் இறந்துபோய்விட்டார். தாயும் தந்தையுமில்லாத எனக்கு தாயாக தந்தையாக எனக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தோடு நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஒரு அப்பா என்னுடைய திண்டுக்கல்லார் (திண்டுக்கல் சீனிவாசன்) இன்னொரு அப்பா நத்தம் ஐயா (நத்தம் விஸ்வநாதன்) இருக்கிறார், இதற்கு மேல், என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

காலையில் போன் பண்ணும்போதுகூட, அப்பா (திண்டுக்கல் சீனிவாசன்) என்னுடைய பிள்ளையை மாதிரி உன்னை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சொன்னார். ஆயிரக் கணக்கான அப்பாக்கள், ஆயிரக் கணக்கான அம்மாக்கள், லட்சக்கணக்கான சகோதரர்கள், லட்சக் கணக்கான சகோதரிகள், லட்சக் கணக்கான மாமன்மார்கள், லட்சக்கணக்கான மாமிமார்கள் லட்சக் கணக்கான சித்தப்பா, சித்திக்களைக் கொண்டிருக்கிற நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

இங்கே கிடைக்கிற வெற்றி என்பது வரலாற்று வெற்றியாக நான் கருதுகிறேன். ஒருபோதும் திண்டுக்கல்லையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்லுகிற ஒரு புனிதமான உறவு நம் இருவருக்கும் இடையில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே, திண்டுக்கல்லை விட்டு என்னைப் பிரிக்க முடியாது" என்று நெல்லை முபாரக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.


Next Story