தி.மு.க. என்ற வைரசை அழிக்க வந்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்: ராஜாஜி பேரன் கருத்து


தி.மு.க. என்ற வைரசை அழிக்க வந்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்:  ராஜாஜி பேரன் கருத்து
x
தினத்தந்தி 30 March 2024 10:27 AM GMT (Updated: 30 March 2024 12:25 PM GMT)

தென்சென்னை மக்களுக்காக வலிமையான குரல் கொடுப்பவராக தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறார் என்று கேசவன் கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர். கேசவன் அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக சில நாட்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார். அவர் தமிழிசை சவுந்தரராஜனை இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்து தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார்.

இதன்பின்னர் கேசவன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, தெலுங்கானா முன்னாள் கவர்னர் மற்றும் தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளரான தமிழிசை சவுந்தரராஜன், தென்சென்னைக்கான மோடியின் உத்தரவாதம் ஆவார்.

நாங்கள் பா.ஜ.க.வின் வெற்றி வேட்பாளரான தமிழிசை சவுந்தரராஜனை இன்று நேரில் சந்திப்பதற்காக வந்துள்ளோம். அவருடைய பிரசாரத்திற்கு ஆசி வழங்கும் வகையில் பிரசாதம் கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறினார். பெருந்தொற்று ஏற்பட்டபோது, பிரதமர் மோடி நமக்கெல்லாம் தடுப்பூசி வழங்கினார். தமிழகத்தில் தி.மு.க.வுக்கும் ஒரு தடுப்பூசி தேவையாக உள்ளது.

தென்சென்னை மக்களுக்காக வலிமையான குரல் கொடுப்பவராக தமிழிசை சவுந்தரராஜன் இருப்பதுடன், தி.மு.க. என்ற வைரசை தோற்கடிக்க கூடிய தடுப்பூசியாக அவரை பிரதமர் மோடி அனுப்பி வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். எல்லா வேட்பாளர்களிலும், மக்களுக்கு உள்ள சிக்கல்களை அறிந்து அவற்றை தீர்ப்பது எப்படி? என அறிந்து வைத்திருக்கும் ஒரே வேட்பாளர் தமிழிசையே ஆவார் என்றும் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கினார். அவர், தெருவோர கடை ஒன்றில் வடை வாங்கி சாப்பிட்டார். அப்போது அவர் கூறும்போது, கடை உரிமையாளர் ஒரு பெண். இது பெண்களுக்கு அதிகாரமளித்தலில் அடங்கும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப்படுகிறது. நாம் அனைவரும் கனவு காணும் வளர்ச்சி இது.

இந்த முன்னேற்றம் வறுமை நிலையில் உள்ளவர்கள், தெருவோரம் மற்றும் விளிம்புநிலை மக்களிடையேயும் மற்றும் பெண்களிடையேயும் சென்றடைந்துள்ளது. அதனால், நான் பிரசாரம் செய்வதற்கு என எதுவுமில்லை. நம்முடைய நாடு வளர்ச்சிக்கான நிலையில் உள்ளது என்று அவர் பேசினார்.


Next Story