மிரட்டல் அரசியலில் ஈடுபடும் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் - பா.ஜ.க. குற்றச்சாட்டு


மிரட்டல் அரசியலில் ஈடுபடும் இந்தியா கூட்டணி தலைவர்கள் - பா.ஜ.க. குற்றச்சாட்டு
x

Image Courtesy : ANI

‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் மிரட்டல் அரசியலில் ஈடுபடுவதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் மிரட்டல் மற்றும் துஷ்பிரயோக அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, "இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் நஸ்ருல் இஸ்லாம், பிரதமர் மோடியை 400 அடிக்கு கீழ் புதைத்துவிடுவதாக வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்ததன் மூலம், இந்த நாட்டின் மக்கள் சக்தியை நஸ்ருல் இஸ்லாம் அவமதித்துள்ளார். அவரது பேச்சு 'இந்தியா' கூட்டணியின் மனநிலையை காட்டுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் மிரட்டல் மற்றும் துஷ்பிரயோக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், தனது சகோதரர் டி.கே.சுரேஷுக்கு வாக்களிக்காவிட்டால் தண்ணீர் வழங்க முடியாது என ஹவுசிங் சொசைட்டி குடியிருப்புவாசிகளை சமீபத்தில் மிரட்டினார்.

அதே போல், காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்காவிட்டால், 25 கோடி ரூபாய் சிறப்பு மானியம் வழங்கப்பட மாட்டாது என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் மிரட்டல் விடுத்தார்" என ஷேசாத் பூனாவாலா குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் நஸ்ருல் இஸ்லாம், தனது பேச்சு தொடர்பாக விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறாது என்று கூறவே அவ்வாறு பேசியதாகவும், யாரையும் காயப்படுத்தும் நோக்கில் பேசவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.


Next Story