'இந்தியா' வென்றுவிட்டது; மோடி தோற்றுவிட்டார் - மம்தா பானர்ஜி
மக்களவை தேர்தலில் 'இந்தியா' வென்றுவிட்டது என்றும், மோடி தோற்றுவிட்டார் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் 'இந்தியா' கூட்டணி 235 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க.விற்கு தனி பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், ஏனெனில் இந்த முறை 400 இடங்களை தாண்டுவோம் என்று அவர்கள் கூறி வந்தார்கள். எத்தனையோ கொடுமைகளைச் செய்து, அளவுக்கு அதிகமாக பணத்தை செலவழித்த மோடி மற்றும் அமித்ஷாவின் ஆணவத்திற்கு முன்னால் 'இந்தியா' வென்றுவிட்டது. மோடி தோற்றுவிட்டார். அயோத்தியில் கூட பா.ஜ.க. தோற்றுவிட்டது. பல அரசியல் கட்சிகளை உடைத்த பிரதமர் மோடியின் மன உறுதியை இந்திய மக்கள் உடைத்துவிட்டனர்."
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.