முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார்.
சேலம்,
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும் தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக களத்தில் பணியாற்றி, பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதற்காக தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளை, சேலம், கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றுள்ளார்.
இந்நிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் இன்று சேலத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தேர்தல் பிரசாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பிரச்சாரத்தின் போது இனிய நண்பர், தி.மு.க. தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர், மு.க. ஸ்டாலினுடன் உரையாடினேன்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆற்ற வேண்டிய காரியங்களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டோம். ஜூன் 4-ஆம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும் புதிய உயரங்களுக்காகவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம்
என பதிவிட்டுள்ளார்.