நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல்; ஒடிசாவில் வீசும் அரசியல் புயல்


நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல்; ஒடிசாவில் வீசும் அரசியல் புயல்
x
தினத்தந்தி 10 April 2024 5:16 AM GMT (Updated: 10 April 2024 9:06 AM GMT)

ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.

புவனேஷ்வர்,

இந்தியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள ஒடிசா மாநிலம், கலை மற்றும் பாரம்பரியத்துடன் தாதுவளமும் நிறைந்தது. ஒரிசா என்று அழைக்கப்பட்டு வந்த இம்மாநிலம் தற்போது ஒடிசாவாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாநில மக்கள் ஒரிய மொழியுடன் வங்காளம், தெலுங்கு, இந்தி மற்றும் உருது மொழிகளையும் பேசுகின்றனர். பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலும், கொனார்க் சிற்ப கட்டிடமும் இங்குதான் உள்ளது. மாநிலத்தின் தலைநகரமாக புவனேஸ்வர் உள்ளது.

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4 கோடியே 19 லட்சத்து 74 ஆயிரத்து 218 பேர் உள்ளனர். இந்த மாநிலத்தில் 21 நாடாளுமன்ற தொகுதிகளும், 147 சட்டசபை தொகுதிகளும் உள்ளது.

நாடாளுமன்றத்துடன் சட்டசபைக்கும் தேர்தல்

தற்போது இங்கு நவீன் பட்நாயக்கின் தலைமையிலான பிஜு ஜனதா தள அரசு நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிஜு ஜனதா தாளம் 112 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதே போல் நாடாளுமன்ற தேர்தலில் 13 இடங்களில் வெற்றி பெற்றது.

அதே நேரம் இங்கு பா.ஜனதா கட்சி சட்டசபையில் 23 இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. 8 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 9 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மற்ற கட்சிகள் 2 இடங்களை பிடித்தனர்.

தற்போது நாடாளுமன்ற தேர்தலுடன், ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு அடுத்த மாதம் (மே) 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதி என 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய அரசியல் சூழலை பார்ப்பதற்கு முன் ஒடிசா மாநிலத்தின் முந்தைய அரசியல் வரலாற்றை பற்றி பார்ப்போம்.

காங்கிரசின் இரும்பு கோட்டை - தனிப்பெரும் தலைவர் பிஜுபட்நாயக்

பிஜுபட்நாயக் ஒடிசா மாநிலத்தின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்தவர். இவரை தவிர்த்து ஒடிசா அரசியலை பார்க்க முடியாது. என்ஜினீயரிங் படித்த இவர், சுதந்திர போராட்டத்தில் குதித்தார். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஒடிசா ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் அசைக்கமுடியாத இரும்புக்கோட்டையாக திகழ்ந்தது. தொடர்ச்சியாக பல ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்தது. 1961-ம் ஆண்டு பிஜு பட்நாயக் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. அவரே முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். 1963-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜரின் 'கே.பிளான்' என்ற திட்டத்தின்படி பிஜுபட்நாயக்கும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

1969-ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து உட்கல் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். 1975-ம் ஆண்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை தீவிரமாக எதிர்த்தார். அந்த சூழலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிஜுபட்நாயக், ஜனதா கட்சி மந்திரி சபையில் மத்திய மந்திரியானார்.

தொடர்ந்து ஜனதாதளத்தின் மூத்த தலைவராக திகழ்ந்த அவர், ஒடிசாவில் ஜனதா தளம் கட்சியை வளர்த்தார். மீண்டும் 1990-ம் ஆண்டு ஒடிசா முதல்-மந்திரியானார். 1997-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

பிஜு ஜனதா தளம் - நவீன்பட்நாயக்

ஒடிசா மாநிலத்தின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த பிஜுபட்நாயக்கின் மகன் தான் தற்போதைய முதல்-மந்திரி நவீன் பட்நாயக். தந்தையின் மறைவுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்த நவீன் பட்நாயக், ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து 1997-ம் ஆண்டு தந்தையின் பெயரில் பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார். தனது கட்சிக்கு சங்கு சின்னத்தை தேர்வு செய்தார்.

பின்னர் 1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தார். அப்போது அவர் அமைத்த கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றது. 1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளை அந்த கூட்டணி கைப்பற்றியது. பிரதமர் வாஜ்பாய் மந்திரி சபையில் கேபினட் மந்திரியாக நவீன் பட்நாயக் இருந்தார்.

தொடர் வெற்றிகளை குவித்தார்

தொடர்ந்து 2000-ம் ஆண்டில் நடைபெற்ற ஒடிசா சட்டசபை தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்றது. நவீன் பட்நாயக் முதல்-மந்திரி ஆனார். அன்று முதல் தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். வளர்ச்சி, நவீனம் ஆகியவை நவீன் பட்நாயக்கின் வெற்றியின் ரகசியம்.

எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் அவர், தனது கட்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்காக, தனது உதவியாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.கார்த்திகேய பாண்டியனை தனது கட்சியின் அடுத்த முகமாக கொண்டுவர திட்டமிட்டார். எனவே அவரை விருப்ப ஓய்வு பெற செய்து, ஒடிசா மாநில முக்கிய அதிகாரியாக கேபினட் அந்தஸ்தில் நியமித்தார். பின்னர் அவரை கட்சியிலும் இணைத்துக்கொண்டார்.

தற்போதைய களச்சூழல்

பா.ஜனதாவின் உற்ற நண்பராக விளங்கி வந்த நவீன் பட்நாயக் அக்கட்சியுடன் பல ஆண்டுகள் கூட்டணியில் இருந்தார். 2009-ம் ஆண்டு பா.ஜனதாவுடனான உறவை முறித்த நவீன் பட்நாயக், அதன் பின்னர் தனித்தே போட்டியிட்டு வந்தார். ஆனாலும் மத்திய அரசுடன் இணக்கமான உறவையே கடைப்பிடித்து வந்தார்.

இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளமும், பா.ஜனதாவும் நெருங்கி வரும் நிலை உருவானது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருகட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நவீன்பட்நாயக் இந்த முறையும் தனது கட்சி தனித்தே போட்டியிடும் என்று அறிவித்துவிட்டார். கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பா.ஜனதாவும் இந்த முறை ஒடிசாவை பிடித்துவிட தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பிரதமர் மோடியின் 10 ஆண்டு சாதனை கைகொடுக்கும் என்று நம்புகிறார் மாநில பா.ஜனதா தலைவர் மன்மோகன் சமால். அதே நேரம் காங்கிரஸ் கட்சியும், இழந்த செல்வாக்கை பெற களப்பணியாற்றி வருகிறது. இதற்கு ராகுல் காந்தியின் பாதயாத்திரை கை கொடுக்கும் என்கிறார் மாநில தலைவர் சரத் பட்நாயக்.

ஒடிசாவில் சங்கு மீண்டும் ஒலிக்குமா?

தாமரை மலருமா....?

கை உயருமா...?

நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுவதால் ஒடிசாவில் அரசியல் புயல் வீசுகிறது. மக்கள் என்ன தீர்ப்பு எழுதபோகிறார்கள் என்பது ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும்.

தோல்வியில் முடிந்த பிஜுபட்நாயக்கின் முயற்சி...

ஒடிசாவுக்கும், தமிழகத்துக்கும் கலை மற்றும் பாரம்பரியத்தில் தொடர்பு உள்ளது என்றாலும் அரசியலில் உள்ள தொடர்பு மிக நீண்ட நெடியது. தமிழகத்தில் அப்போது தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க. உருவாகி இருந்தது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்.

இந்தநிலையில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த பிஜுபட்நாயக், தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் தனது முயற்சிக்கு வலு சேரும் என்று கருதினார். இதையடுத்து தி.மு.க.-அ.தி.மு.க. இணைப்பு குறித்து முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரையும் சந்திக்க வைத்தார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஒடிசாவின் முகமான தமிழர்

முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் உதவியாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் என்னும் வி.கார்த்திகேய பாண்டியன். இவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டம் கூத்தப்பன்பட்டியில் பிறந்தவர். மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர், 2000-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.

முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் உதவியாளராக இருந்த வி.கே.பாண்டியனின் கடின உழைப்பு, நிர்வாகத்திறன் ஆகியவை நவீன்பட்நாயக்கை கவர்ந்தது. இதையடுத்து அவரை தனது அரசியல் வாரிசாக்க விரும்பினார். தனது விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட வி,கே.பாண்டியன், தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து அவரை மாநிலத்தின் மிக முக்கிய பொறுப்பில் கேபினட் மந்திரி அந்தஸ்தில் நியமித்தார் நவீன்பட்நாயக்.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் வி.கே.பாண்டியன். அன்று முதல் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்க தொடங்கினார். இன்று ஒடிசாவின் முகமாக திகழ்கிறார்.


Next Story