நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி பொது விடுமுறை


நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி பொது விடுமுறை
x

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

சென்னை,

இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 19-ந்தேதி முதல் ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 96 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுபோட ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில், முதற்கட்ட ஓட்டுப்பதிவு நாளான வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 32 பொதுத்தொகுதிகள், 7 தனித்தொகுதிகள் என மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் தலா ஒரு அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப்போட்டி நிலவுகிறது. கோடை வெயிலுக்கு மத்தியில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, தொகுதி வாரியாக சென்று தேர்தல் பிரசாரங்களில், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வருகிற 19-ம் தேதி தமிழகத்திற்கு பொதுவிடுமுறை அளித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு இணங்க, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளாளார்.


Next Story