பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்வதை தி.மு.க. அரசு தடுக்கிறது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு


தினத்தந்தி 15 April 2024 11:22 AM GMT (Updated: 15 April 2024 12:55 PM GMT)

பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்வதை தி.மு.க. அரசு தடுக்கிறது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நெல்லை,

Live Updates

  • 15 April 2024 12:46 PM GMT

    நெல்லை அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

    தி.மு.க.வும், காங்கிரசும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது. போதைப்பொருள் விற்பவர்களுக்கு எதிராக பா.ஜ.க. நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

    பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்வதை தி.மு.க. அரசு தடுக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வெற்றியை கொடுத்து புதிய வரலாறு படைக்க தமிழ்நாடு தயாராக உள்ளது. உங்கள் கனவுகளே எங்கள் நோக்கங்கள். பா.ஜ.க. கூட்டணிக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

  • 15 April 2024 12:08 PM GMT

    நெல்லை அகஸ்தியர்பட்டி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது

    தமிழ்நாட்டில் பெண்கள் மத்தியில் எனக்கு ஆதரவு உள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் புல்லெட் ரெயில் இயக்கப்படும். தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை விரும்புபவர்களின் முதல் தேர்வு பா.ஜ.க.வாகதான் இருக்கும்.

    உலகம் முழுவதும் திருவள்ளூவர் மையங்களை அமைக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. தமிழ் கலாசாரம் மீது தி.மு.க., காங்கிரசுக்கு வெறுப்பு உள்ளது. செங்கோல் விவகாரத்தில் இது உண்மையானது.

    குடும்ப கட்சியான காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர். புகழை தி.மு.க. அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார். 

  • 15 April 2024 11:46 AM GMT

    தமிழ் கலாசாரத்தை தி.மு.க. வெறுக்கிறது - பிரதமர் மோடி

    தமிழ் கலாசாரத்தை தி.மு.க., காங்கிரஸ் வெறுக்கிறது. இந்த கூட்டத்தை பார்த்து இந்தியா கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும். தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தென்னிந்தியாவிலும் புல்லட் ரெயில் இயக்கப்படும். தமிழ் மொழியை பா.ஜ.க. உலக அளவில் பிரபலபடுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார். 

  • 15 April 2024 11:27 AM GMT

    ‘வணக்கம் திருநெல்வேலி’ என தமிழில் பேசி உரையை தொடங்கிய பிரதமர் மோடி

    திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றுள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி வணக்கம் திருநெல்வேலி என தமிழில் பேசி தனது உரையை தொடங்கியுள்ளார்.

  • 15 April 2024 11:22 AM GMT

    நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி இன்று நெல்லை வந்துள்ளார். நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி பா.ஜ.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.


Next Story