ஊழலை கற்றுத்தரும் பள்ளியை பிரதமர் மோடி நடத்துகிறார்: ராகுல் காந்தி கடும் தாக்கு


ஊழலை கற்றுத்தரும் பள்ளியை பிரதமர் மோடி நடத்துகிறார்: ராகுல் காந்தி கடும் தாக்கு
x

ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடியே விரிவாக பாடம் கற்பித்து வருகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடினார், அவர் நாட்டில் "ஊழல் பள்ளி" நடத்தி வருவதாகவும், முழுமையான பாடங்களில் அனைத்து அத்தியாயங்களையும் கற்பிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளதாவது,

"பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் ஊழல் செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு 'முழு அறிவியல் ஊழல்' என்ற பாடத்தின் கீழ், ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி? நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு வினியோகிக்கப்படுகின்றன? ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், இந்த ஊழல் பள்ளியை பூட்டி, இந்த பாடத்தை ஒழித்துக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் 'எக்ஸ்' தளத்தில், "மிரட்டி பணம் பறிக்கும் அரசை தேர்வு செய்யாதீர்கள். மாற்றத்தை தேர்வு செய்ய காங்கிரசுக்கு வாக்களியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரத்தில், ராகுல் காந்தியை பிரதமர் மோடி 'ஊழலில் சாம்பியன்' என்று விமர்சித்திருந்த நிலையில், ராகுல் காந்தி தற்போது எதிர்வினையாற்றியிருக்கிறார்.


Next Story