கேரள மாநிலம் பாலக்காட்டில் பிரதமர் மோடி பேரணி


கேரள மாநிலம் பாலக்காட்டில் பிரதமர் மோடி பேரணி
x

பிரதமர் மோடியை வழிநெடுகிலும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

திருவனந்தபுரம்,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் கோவையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து அங்கு நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இன்று காலை 10.45 மணிக்கு கோட்டைமைதான் அஞ்சுவிலக்கு பகுதியில் இருந்து தொடங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. திறந்த வாகனத்தில் பொதுமக்களைப் பார்த்து கையசைத்தவாறு சென்ற பிரதமர் மோடியை, வழிநெடுகிலும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

கேரளாவின் பாலக்காடு தொகுதியில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சி.கிருஷ்ணகுமார் 21.24% வாக்குகளை பெற்றிருந்தார்.

பிரதமர் மோடி கடந்த 3 மாதங்களில் 5 முறை கேரளாவிற்கு வருகை தந்துள்ளார். கடந்த 15-ந்தேதி பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கேரள மக்கள் ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் அவதியடைந்துள்ளனர் என்றும், கேரளாவில் தாமரை மலரப்போகிறது என்றும் தெரிவித்தார்.


Next Story