தேர்தல் விதிமுறை மீறல்: அண்ணாமலை மீது மேலும் 2 வழக்குப்பதிவு


தேர்தல் விதிமுறை மீறல்: அண்ணாமலை மீது மேலும் 2 வழக்குப்பதிவு
x

கோப்புப்படம்

இரவு 10 மணியை கடந்து விட்டதால் பிரசாரம் செய்யக்கூடாது என போலீசார் தடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை,

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலை, கோவை நாடாளுமன்ற தொகுதியில், அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர், கோவையை அடுத்த சூலூர் பகுதியில் தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார்.

இருகூர் பிரிவு பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது இரவு 10 மணி ஆகி விட்டதால் மைக்கை ஆப் செய்து விட்டு கையசைத்தபடி சென்றார். இரவு 10 மணியை கடந்து விட்டதால் பிரசாரம் செய்யக்கூடாது என போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அண்ணாமலை மற்றும் பா.ஜனதாவினர் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் அண்ணாமலை உள்பட 300 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் கோவை காமாட்சிபுரம் பகுதியிலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பா.ஜனதாவினர் பிரசாரம் மேற்கொண்டதாக சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜனதாவினர் மீது அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, வெடி பொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே பீளமேடு போலீசாரும் அண்ணாமலை மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆகவே இதுவரை 3 வழக்குகள் அண்ணாமலை மீது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story