ப்ளாஷ்பேக் 2023: இந்திய அரசியலில் மறக்க முடியாத டாப்-10 நிகழ்வுகள்


ப்ளாஷ்பேக் 2023: இந்திய அரசியலில் மறக்க முடியாத டாப்-10 நிகழ்வுகள்
x

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு இந்திய அரசியலில் பரபரப்பான பல நிகழ்வுகளை காண முடிந்தது. பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றுதிரண்ட எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, பின்னர் உச்ச நீதிமன்றம் வரை சென்று இழந்த பதவியை பெற்ற தருணம், பாஜக எம்பி மீதான பாலியல் புகார், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம், பாராளுமன்ற பாதுகாப்பு மீறல் என இந்த ஆண்டின் மறக்க முடியாத சம்பவங்களை பார்ப்போம்.

பாஜக எம்பி மீது பாலியல் புகார்

இந்த ஆண்டின் துவக்கத்தில் பாஜக எம்பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். அவர் பதவி விலக வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனவரி 18ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைய, பிரிஜ் பூஷன் மீது காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டெல்லி துணை முதல்-மந்திரி கைது

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதன்பின் மார்ச் 1ம் தேதி சிசோடியா, தன் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங், முன்னாள் மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் குற்றவாளி என மார்ச் 23ம் தேதி அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் ஜூலை 7ம் தேதி நிராகரித்தது. இதனால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அதன்பின்னர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து ஆகஸ்ட் 4ம்தேதி உத்தரவிட்டது. இதனால் இழந்த பதவியை பெற்ற ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினராக தனது பணிகளை தொடங்கினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு

மே 28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காமல் அவரை ஓரங்கட்டியதாக எதிர்க்கட்சிகள் சர்ச்சையை எழுப்பின. அத்துடன், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்தன.

இந்தியா கூட்டணி உருவாக்கம்

பாஜகவுக்கு எதிராக அணிதிரண்ட 26 எதிர்க்கட்சிகள் ஜூலை 18 அன்று கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A) என்று பெயரிட்டன. 2024 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இந்த கூட்டணியின் நோக்கம். தேர்தல் வியூகம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

எனினும் இந்த ஆண்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு யூகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்டு, மக்களவையில் செப்டம்பர் 20ஆம் தேதியும், மாநிலங்களவையில் செப்டம்பர் 21ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது.

செப்டம்பர் 29 அன்று மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இடஒதுக்கீட்டு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

5 மாநில தேர்தல்

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வந்தன. இதில், 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. குறிப்பாக ராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றிய பாஜக, மத்திய பிரதேசத்தில் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. தெலுங்கானாவில் முதன்முறையாக காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

மஹுவா மொய்த்ரா நீக்கம்

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக மக்களவை நெறிமுறைகள் குழு விசாரித்து தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா டிசம்பர் 8ஆம் தேதி நீக்கப்பட்டார்.

நாடாளுமன்ற அத்துமீறல்

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, பலத்த பாதுகாப்பையும் மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 இளைஞர்கள் மக்களவைக்குள் குதித்தனர். எம்.பி.க்கள் இருக்கை மீது தாவி குதித்து ஓடினர். தங்கள் கைகளில் இருந்த புகைக் குப்பிகளை வீசினர். அதில் இருந்து வெளிப்பட்ட மஞ்சள் நிற புகை, நாடாளுமன்றம் முழுவதும் பரவியது. இதுதவிர, "சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்" என்று கோஷங்களும் எழுப்பினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஒரு பெண்ணும், இளைஞரும் இதேபோல செய்தனர். சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா விளக்கமளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தினமும் அவையில் போராடினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவர்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சேர்த்து 146 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றிலேயே ஒரே கூட்டத்தொடரில் இத்தனை பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. இவர்களில் அதிகம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.


Next Story