பாரீஸ் ஒலிம்பிக்: பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகள் யார் - யார்?


பாரீஸ் ஒலிம்பிக்:  பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகள் யார் - யார்?
x

33-வது ஒலிம்பிக் தொடர் நாளை தொடங்க உள்ளது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1900-ம் ஆண்டில் இருந்து பங்கேற்று வருகிறது. இந்தியா இதுவரை 10 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம் என்று 35 பதக்கங்கள் மட்டுமே வென்று இருக்கிறது. 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் கைப்பற்றியதே ஒரு ஒலிம்பிக்கில் இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும்.

நாளை தொடங்கும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய தரப்பில் 117 வீரர், வீராங்கனைகள் 16 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். இந்த முறை இந்தியா குறைந்தது 10 பதக்கமாவது வெல்லும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனையொட்டி பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாய்ப்புள்ள வீரர், வீராங்ககைள் குறித்து இங்கு காண்போம்:-

நீரஜ் சோப்ரா: அரியானாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிதூக்கினார். ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திர சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். அதைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டு, ஹங்கேரியில் கடந்த ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் ஆகியவற்றிலும் மகுடம் சூடினார்.

தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நீரஜ் சோப்ரா, 2022-ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்கில் 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அவரது சிறந்த நிலை இதுவாகும். இதே தூரத்தை எறிந்தால் அவரது கழுத்தை மறுபடியும் பதக்கம் அலங்கரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போட்டிக்குரிய நாளில் காற்றின் தாக்கம், சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தொழில்நுட்பரீதியாக திறம்பட செயல்படுவதை பொறுத்து அவரின் வெற்றி வாய்ப்பு அமையும், ஈட்டி எறிதலில் தகுதி சுற்று ஆகஸ்டு 6-ம் தேதியும், இறுதிப்போட்டி 8-ம் தேதியும் நடைபெறுகிறது.

ஆக்கி: ஆண்கள் ஆக்கியில் இந்தியா 41 ஆண்டுகள் கழித்து கடந்த ஒலிம்பிக்கில் பதக்கத்தை (வெண்கலம்) கைப்பற்றியது. இந்த முறை ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் இந்திய ஆக்கி அணி களம் இறங்குகிறது. மூத்த கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பாரீஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதால், பதக்கத்தை வென்று அவருக்கு அர்ப்பணிக்க நமது வீரர்கள் சூளுரைத்துள்ளனர்.

பி.வி.சிந்து: இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2021-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றிருந்தார். இந்த தடவையும் பதக்கத்துக்கு முத்தமிட்டால், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் 3 பதக்கத்தை தனதாக்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார். கடந்த ஓராண்டாக எந்த சர்வதேச கோப்பையும் வெல்லாத சிந்து தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கிறார். இருப்பினும் ஒலிம்பிக் போன்ற முக்கியமான போட்டியில் எளிதில் எதையும் விட்டுவிடமாட்டார்.

மீராபாய் சானு: பளுதூக்குதல் வீராங்கனையான மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு 2021-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். சமீபகாலமாக அடிக்கடி காயத்தில் சிக்கிய போதிலும் பதக்க வாய்ப்பில் மீராபாய் சானுவும் இருக்கிறார்.

நிகாத் ஜரீன்: தெலுங்கானாவைச் சேர்ந்த குத்துச்சண்டை புயல், நிகாத் ஜரீன் 50 கிலோ எடைப்பிரிவில் கோதாவில் குதிக்கிறார். 2 முறை உலக சாம்பியனான நிகாத் ஜரீனுக்கு இதுவே முதலாவது ஒலிம்பிக்காகும். கடந்த இரு ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக வலம் வரும் நிகாத் ஜரீனுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைக்க வாய்ப்புள்ளது.

சிப்ட் கவுர் சம்ரா: 22 வயதான இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான சம்ரா பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை பிரிவில் இலக்கை குறி வைக்கிறார். ஆசிய விளையாட்டில் தங்கத்தை சுட்ட அவர் கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெண்கலத்தை வென்றிருந்தார். துப்பாக்கி சுடுதலில் 21 வீரர், வீராங்கனை இந்திய அணியில் அங்கம் வகித்தாலும், அவர்களில் அதிக வாய்ப்புள்ளவராக கணிக்கப்பட்டு இருக்கிறார்.

இவர்களை தவிர்த்து கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, காமன்வெல்த் விளையாட்டின் 'ஹாட்ரிக்' சாம்பியன் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், அன்திம் பன்ஹால், கோல்ப் வீராங்கனை அதிதி அசோக், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகெர், டென்னிஸ் இரட்டையர் ரோகன் போபண்ணா- ஸ்ரீராம் பாலாஜி உள்ளிட்டோரும் பதக்கம் வெல்லும் வாய்பில் உள்ளனர்.


Next Story