4-வது டெஸ்ட்: சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட கே.எல்.ராகுல்.. 90 ரன்களில் அவுட்

இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
மான்செஸ்டர்,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதமடித்து அசத்தினர். இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே பேரிடி விழுந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ஜெய்ஸ்வால் (0) ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட்டிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் (0) சந்தித்த முதல் பந்திலேயே இதே போல் விக்கெட்டை தாரைவார்த்தார். ரன் கணக்கை தொடங்கும் முன்பே இரு விக்கெட்டுகள் காலியானதால் இந்தியா அதிர்ச்சிக்குள்ளானது.
இந்த நெருக்கடியான சூழலில் 3-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலும், கேப்டன் சுப்மன் கில்லும் இணைந்தனர். பொறுமையை கடைபிடித்த இவர்கள் முழுமையாக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தில் பந்து வீசாத இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்றைய நாளின் ஆரம்பத்திலேயே பந்துவீச வந்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அவரது பந்துவீச்சில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். 90 ரன்களில் ஆடி கொண்டிருந்த கே.எல்.ராகுல் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு எல்பிடபிள்யூ ஆனார்.
அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கியுள்ளார். மறுமுனையில் சுப்மன் கில் சதத்தை நெருங்கிய நிலையில் பேட்டிங் செய்து வருகிறார். கில் - ராகுல் ஜோடி 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.






