ஆசிய கோப்பை: இலங்கை அணியின் வெற்றி நடைக்கு முடிவு கட்டிய வங்காளதேசம்

நடப்பு ஆசிய கோப்பை சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.
துபாய்,
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்‘சூப்பர்4’ சுற்று நேற்று தொடங்கியது. இதில் துபாயில் நேற்று இரவு நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த வங்காளதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தசுன் ஷனகா 64 ரன்கள் அடித்தார். வங்காளதேச அணி தரப்பில் முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சைப் ஹசன் 61 ரன்னும், தவ்ஹித் ஹிரிடாய் 58 ரன்னும் எடுத்தனர். இலங்கை தரப்பில் ஹசரங்கா, தசுன் ஷனகா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த தோல்வியின் மூலம் ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்று வீறுநடை போட்ட இலங்கை அணியின் வெற்றி பயணத்திற்கு வங்காளதேசம் முடிவு கட்டியது.






