ஆசிய கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி

இலங்கை அணி 14.4 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபுதாபி,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் - இலங்கை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்காளதேச அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி முதல் 2 ஓவர்களில் ரன் எதுவுமின்றி தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பர்வேஸ் ஹொசைன் எமோன் மற்றும் தன்சித் ஹசன் இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றினர். அடுத்து வந்த தவ்ஹித் ஹ்ரிடோய் (8 ரன்கள்), மஹேதி ஹசன் (9 ரன்கள்) நிலைக்கவில்லை.
சிறிது நேரம் தாக்குப்பிடித்த லிட்டன் தாஸ் 28 ரன்களில் கேட்ச் ஆனார். இலங்கை அணியின் பந்துவீச்சில் அதிரடி காட்ட முடியாமல் வங்காளதேசம் திணறியது. இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த ஜேக்கர் அலி மற்றும் ஷமிம் ஹொசைன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டிய இந்த ஜோடி வங்காளதேச அணியை 100 ரன்களை கடக்க உதவியது. ஜேக்கர் அலி - ஷமிம் ஹொசைன் ஜோடி 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்காளதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் அடித்தது. ஜேக்கர் அலி 41 ரன்களுடனும், ஷமிம் ஹொசைன் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குசல் மெண்டிஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசாங்கா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். கமில் மிசாரா 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இலங்கை அணி 14.4 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






